

புதுடெல்லி: டெல்லி உத்தம் நகர் மக்களை அமைதி காக்குமாறு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். வன்முறையை தூண்டுவதாக பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியின் உத்தம் நகரில் கடந்த மார்ச் 4-ம் தேதி ஹோலி பண்டிகையின்போது இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதலில் 26 வயது இளைஞர் கொல்லப்பட்டதை தொடர்ந்து சமூகப் பதற்றம் நிலவுகிறது. ரமலான் பண்டிகையின்போது அங்கு வன்முறை நிகழலாம் என அச்சத்தில் சில குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளன. அப்பகுதியில் தற்போது பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், “உத்தம் நகர் மக்கள் வன்முறைக்காக பெரும் விலையை செலுத்தியுள்ளனர். அவர்கள் இனிமேலும் ரத்தக் களரியை விரும்பவில்லை. வன்முறை, வெறுப்பை தூண்டுவதற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளும் பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புகள் மட்டுமே இத்தகைய ரத்தக் களரியை விரும்புகின்றன.
நாட்டின் வலிமை அதன் ஒற்றுமையிலும் சகோதரத்துவத்திலும் அடங்கியிருப்பதால், டெல்லி மக்கள் எந்தவிதமான தூண்டுதல்களுக்கும் பலியாகிவிடக் கூடாது. அமைதி காக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.