

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பாஜக தலைமை மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கும் பெண் நிர்வாகிகளை நியமித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து மட்டங்களிலும் கட்சியை முழுமையாகத் தயார்படுத்தி, 2027 தேர்தல் களத்தில் இறங்க பாஜக முன்னதாகவே திட்டமிட்டு செயல்பட ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறியதாவது: 2027-ம் ஆண்டு உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பாஜக இப்போதிலிருந்தே தனது அடிமட்ட கட்டமைப்பைப் பலப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஆலோசனைக் கூட்டங்கள், மாவட்ட வாரியான சுற்றுப்பயணங்கள் மற்றும் ‘மிஷன் 403’ எனும் பிரத்யேகத் திட்டங்களை பாஜக கையில் எடுத்துள்ளது.
கட்சியின் அமைப்பு ரீதியான இடைவெளிகளைக் கண்டறிந்து, சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளவர்கள் மற்றும் விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைக்கவும், பல்வேறு சமூகப் பிரிவினரைச் சென்றடையவும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தொகுதிக்கு ஒரு பெண் தலைவர்
பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் ‘மிஷன் 403’ என்ற முக்கியத் திட்டத்தை பாஜக தொடங்கியுள்ளது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கும் தலா ஒரு பெண் நிர்வாகி நியமிக்கப்பட்டுள்ளார். வெறும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று பெண் வாக்காளர்களுடன் நிலையான தொடர்பை ஏற்படுத்தவும், அரசின் நலத்திட்டங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்கவும் இவர்கள் பணியாற்றுவார்கள்.
கட்சியின் மகளிர் அணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், லக்னோவில் மாநில அளவிலான அமைப்பு ரீதியான பயிலரங்கம் நடைபெறவுள்ளது. இதில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மாநிலப் பொறுப்பாளரும் தேசியப் பொதுச் செயலாளருமான வினோத் தாவ்டே, மாநிலத் தலைவர் பங்கஜ் சவுத்ரி, மாநில இணைப் பொறுப்பாளர் மேதா குல்கர்னி மற்றும் மகளிர் அணி மாநிலத் தலைவர் சரோஜ் குஷ்வாஹா ஆகியோர் பங்கேற்று நிர்வாகிகளுக்கு வழிகாட்ட உள்ளனர். இவ்வாறு பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.