

ராகுல் காந்தி
புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்க்கும் போராட்டத்தில் ஒரு பெண் காவலரை, ராகுல் காந்தி தவறான முறையில் தொட்டு தள்ளிவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை முதல் டெல்லியில் காங்கிரஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், எஸ்ஐஆருக்கு எதிராகவும் நடக்கும் இப்போராட்டத்துக்கு ராகுல் காந்தி தலைமை ஏற்றுள்ளார்.
இந்தப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர உள்ளது. இச்சூழலில் டெஎல்லியில் பல்வேறு இடங்களில் காங்கிரஸார் மற்றும் போலீஸாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில், கூட்ட நெரிசலில் ராகுல் காந்தி பெண் காவலர் ஒருவரை தவறான முறையில் தொட்டுத் தள்ளிவிட்டதாகவும், பிரியங்கா காந்தி அக்காவலரை முழங்கையால் தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டி பாஜக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜந்தர் மந்தர் அருகே காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் போது, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் காவல்துறைக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.
இந்த வீடியோவில், காங்கிரஸ் தலைவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்படும்போது அவர்களுடன் மோதுவதைக் காட்டும் பல காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.
அத்தகைய ஒரு வீடியோவில், காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா பெண் காவலர் ஒருவரை முழங்கையால் தாக்குவது தெரிகிறது. மற்றொரு வீடியோவில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பெண் காவலர் ஒருவரைத் தள்ளுவது காணப்படுகிறது.
போராட்டத்தின் போது காங்கிரஸ் தலைவர்களைக் கைது செய்து பேருந்தில் ஏற்ற டெல்லி காவல்துறை முயன்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தில் ராகுல், பிரியங்கா மீது வழக்குகள் பதிவாகி உள்ளன.
இதில், காவல்துறையை தாக்கியது, அரசுப் பணியைத் தடுத்தது மற்றும் தள்ளுமுள்ளு மற்றும் தவறாக நடந்து கொண்டது ஆகிய குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளன.
இத்துடன், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் மீதும் டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.
பாஜக பகிர்ந்துள்ள வீடியோவில் ராகுல் காந்தி மிகவும் ஆக்ரோஷமாக, தன்னைத்தானே கட்டுப்படுத்த முடியாமல் தள்ளாடும் நிலையில் காணப்படுகிறார். பாஜக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் இந்த வீடியோவைப் பகிர்ந்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது குறித்த பாஜகவின் கேசவன் தன் பதிவில், “ஒரு எம்.பி. அல்லது எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலையில் இருப்பவர் மட்டுமல்ல, நாகரிகமான எந்தவொரு நபரும் ஒரு பெண் காவலரிடம் இத்தகைய முறையற்ற விதத்தில் நடந்துகொள்வாரா?
இத்தகைய அநாகரிகமான மற்றும் முறையற்ற நடத்தையின் மூலம் இந்தியாவின் ‘நாரி சக்தி’யான பெண்களுக்கு ராகுல் காந்தி என்ன செய்தியைச் சொல்ல வருகிறார்?
ஒருபுறம் ‘ஆணாதிக்கத்தை ஒழிப்பது’ பற்றிப் பெரிய அளவில் பேசும் ராகுல் காந்தி, மறுபுறம் இவ்வளவு அநாகரிகமாக நடந்து கொள்கிறார். ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் காயப்படுத்தியதற்காக ராகுல் காந்தி வெட்கப்பட வேண்டும்.
அவருக்குச் சிறிதளவேனும் வெட்கமோ அல்லது குற்ற உணர்வோ எஞ்சியிருந்தால், அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே வீடியோவைப் பகிர்ந்த, பாஜக தொண்டர் பிரீத்தி காந்தி, “சீருடையில் உள்ள ஒரு பெண்ணிடம் முறையற்ற வகையில் நடந்து கொள்வது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பெண்கள் மீதான உங்கள் மரியாதை வெறும் முழக்கங்களுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது.” என்று பதிவிட்டுள்ளார்.
இதுபோல், மேலும் பலர் அதே பதிவைப் பகிர்ந்து ராகுலை கண்டித்து பதிவிட்டுள்ளனர்.
ஜந்தர் மந்தர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தின்போது, பெண் காவலர்கள் மற்றும் கான்ஸ்டபிள்கள் உட்பட தங்கள் துறை சார்ந்த பணியாளர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பல வீடியோக்கள் குறித்து டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.