

ஹைதராபாத்: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியால் பிரியாணி ஓட்டல்களில் ரூ.70,000 கோடி வருவாயை மறைத்து வரிஏய்ப்பு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பரில் ஹைதராபாத்தில் உள்ள 40 பிரியாணி ஓட்டல்களில் சோதனை நடத்தியபோது, வருவாயை மறைத்து ரூ.400 கோடி வரிஏய்ப்பு மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தெலங்கானா, ஆந்திரா, தமிழகம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்படும் பிரபல பிரியாணி ஓட்டல்களின் கட்டண ரசீது விவரங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
சுமார் 1.77 லட்சம் பிரியாணி ஓட்டல்களில் கடந்த 2019 முதல் 2025 வரை எவ்வளவு பிரியாணி விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 60,000 ஜிபி அளவு கொண்ட கோப்புகள் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் விரைவாக ஆய்வு செய்யப்பட்டன.
அப்போது பிரியாணி தயாரிக்க தேவைப்படும் அரிசி, இறைச்சியின் அளவுக்கும், கணக்கில்காட்டப்பட்ட விற்பனைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது. மேலும் ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்பனையான பிரியாணி வகைகளின் எண்ணிக்கைக்கும், ஓட்டல்கள் தாக்கல் செய்த புள்ளிவிவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது.
இதன்படி கடந்த 6 ஆண்டுகளில் சுமார் ரூ.70,000 கோடி அளவிலான பிரியாணி விற்பனையை ஓட்டல் நிர்வாகங்கள் மறைத்துள்ளன. இதுகுறித்து வருமான வரித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பிரியாணி ஓட்டல்களில் ரொக்க பணப் பரிமாற்றம் கணினியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. ரொக்க பண வணிகத்தை ஆய்வு செய்வது மிகவும் கடினம்.
இதன்மூலம் பெரிய அளவில் ஏரிஏய்ப்பு நடந்துள்ளது. மேலும், சாப்ட்வேர் மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட கட்டண ரசீதுகளில் சுமார் 30 நாட்கள் வரையிலான ரசீதுகளின் விவரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2019- 2025 காலகட்டத்தில் 1.77 லட்சம் ஓட்டல்களில் 2.43 லட்சம்கோடிக்கு பிரியாணி விற்பனை நடந்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் ரொக்க விற்பனை, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ரசீதுகளை அழித்ததன் மூலம் ரூ.70,000 கோடி அளவிலான பிரியாணி விற்பனை மறைக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட ஆய்வின்படி கர்நாடகஓட்டல்களில் ரூ.2,000 கோடி, தெலங்கானா ஓட்டல்களில் ரூ.1,500 கோடி, தமிழக ஓட்டல்களில் ரூ.1,200 கோடி வரிஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் மிக குறுகிய காலத்தில் 60,000 ஜிபி அளவு கோப்புகளை ஆய்வு செய்து வரிஏய்ப்பு மோசடியை கண்டுபிடித்து உள்ளோம்.
சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல நாடு முழுவதும் உள்ள பிரியாணி ஓட்டல்கள், இதர ஓட்டல்களில் கோடிக்கணக்கில் வரிஏய்ப்பு நடந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக ஏஐ உதவியுடன் விரைவில் சோதனை தொடங்கப்படும்.