மக்களவையில் தாக்கலானது தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்கள்

மக்களவையில் தாக்கலானது தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்கள்
Updated on
1 min read

புதுடெல்லி: தொகுதி மறுவரையறை, மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாக்களை மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. சபாநாயகர் ஓம் பிர்லா அவையை வழிநடத்தினார். அவை கூடியதும் சட்ட அமைச்சர், மசோதாக்களை அவையில் முன்மொழிய அனுமதி கோரினார்.

அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த எம்பி கே.சி. வேணுகோபால், “இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. நாங்கள் மகளிர் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம். ஆனால், தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கிறோம்.

மத்திய அரசு தற்போது எடுத்து வரும் நடவடிக்கை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை மீதான தாக்குதல். மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 2023-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது மத்திய அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த பிறகே தொகுதி மறு சீரமைப்பு மேற்கொள்ளப்படும். அதன் பிறகே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தது. அவ்வாறு இருக்க, இப்போது எதற்கு தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள மத்திய அரசு முயல்கிறது” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அதை எதிர்ப்பதாக இருந்தால் பிரிவு 72-ன் கீழ் தொழில்நுட்ப காரணங்களுக்காக மட்டுமே எதிர்க்க முடியும். தொழில்நுட்ப பிரச்சினை ஏதும் இல்லாத நிலையில் மசோதா தாக்கல் செய்வதை எதிர்க்க முடியாது” என கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவில் முஸ்லிம் பெண்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படுமா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமித் ஷா, “மத ரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவது என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே, முஸ்லிம் பெண்களுக்கு உள் இட ஒதுக்கீடு என்ற கேள்விக்கே இடமில்லை” என பதில் அளித்தார்.

அதற்கு, “எஸ்சி. எஸ்டி பெண்களுக்கு உள் இட ஒதுக்கீடு அளிக்கப்படுமா?” என அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமித் ஷா, “தற்போது மக்கள் தொகை கணக்கு எடுக்கும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. முதற்கட்டமாக வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடக்கிறது. தொடர்ந்து சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” என பதில் அளித்தார்.

தொடர்ந்து மசோதாவை அறிமுகம் செய்ய அவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதா அறிமுகத்துக்கு ஆதரவாக 207 எம்பிக்கள் வாக்களித்தனர். எதிராக 126 எம்பிக்கள் வாக்களித்தனர். இதன்மூலம், மசோதாவை அறிமுகம் செய்வதற்கு அதிக ஆதரவு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த மசோதாக்கள் மீது பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றவிருக்கிறார்.

மக்களவையில் தாக்கலானது தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்கள்
ஆதவ் அர்ஜுனா சொத்து விவரம் குறித்து விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in