

புதுடெல்லி: வந்தே மாதரம் பாடப்படுவதைத் தடுப்பவர்களுக்கும், இடையூறு செய்பவர்களுக்கும் தண்டனை அளிக்கும் ‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026’-ஐ, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
இதன்மூலம், தேசியப் பாடல் பாடப்படும் போது வேண்டுமென்றே தடுப்பது அல்லது குழப்பம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது இச்சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியப் பங்காற்றிய வந்தே மாதரம் பாடலின் கண்ணியத்தையும், பெருமையையும் பாதுகாப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம்.
இச்சட்டத்தை வரவேற்றுப் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சேத், “சமீபகாலமாக தேசியப் பாடல் மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே அது எங்கு பாடப்பட்டாலும் அதற்குரிய முழு பொது மரியாதையும் அளிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
ஆனால், இந்த நடவடிக்கை மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக அமையும் எனக் கூறி, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, மார்க்சிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஜூலை 19-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
அதில், “இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். வந்தே மாதரம் நமது சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அடையாளம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அதைப் பாடுவதைக் குற்றவியல் சட்டத்துடன் இணைப்பது தவறானது. மேலும், இந்தச் சட்டத்திருத்தம் பேச்சுரிமை, தனிமனித சுதந்திரம் மற்றும் வழிபாட்டு உரிமையை வழங்கும் அரசியல்சாசனப் பிரிவுகள் 19, 21 மற்றும் 25-க்கு எதிராக உள்ளது.
நாடாளுமன்றம் தனியாகச் சட்டம் இயற்றியிருந்தால் மட்டுமே தேசப்பற்றை வெளிப்படுத்துவது கட்டாயமாகும். மற்றபடி, குடிமக்கள் கட்டாயம் தேசப்பற்றைக் காட்ட வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை.
இப்படிப்பட்ட குற்றவியல் சட்டங்களை விரிவுபடுத்துவது, நாட்டின் தேசபக்திக்கும், தனிமனித உரிமைகளுக்கும் இடையே உள்ள சமநிலையைப் பாதிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கும் இம்மசோதாவுக்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.