

கோப்புப் படம்
புதுடெல்லி: பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் 17 ஆண்டுகள் சிறையில் இருந்த இரு குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து, அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது. இதனால், “எனது பாதுகாப்புக்கும், எனது குடும்பத்தினரின் பாதுகாப்புக்கும் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகிறேன்” என்று பில்கிஸ் பானு தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கலவரம் நடைபெற்றது. அப்போது, பில்கிஸ் பானு மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மற்றும் 14 குடும்ப உறுப்பினர்களின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் ஆயுள் தண்டனை பெற்றிருந்தனர். இதில் இருவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு, அக்டோபர் 28, 2026 அன்று தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியிருந்தது.
இது குறித்து பில்கிஸ் பானு தனது வழக்கறிஞர் ஷோபா குப்தா வாயிலாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது வழக்கில் தண்டணை பெற்ற 11 பேரில் இருவருக்கு கிடைத்த பிணை ஆழ்ந்த துயரத்தை அளித்துள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் எனது தரப்பு வாதங்களைக் கேட்காமலேயே, இரண்டாவது முறையாக இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனால், நீதி அமைப்பின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளேன்.
2002-ம் ஆண்டு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் இந்த உத்தரவு குறித்து உச்ச நீதிமன்றம் என்னை விசாரணைக்கு அழைக்கவோ அல்லது எனது தரப்பு வாதங்களைக் கேட்கவோ இல்லை. இதைப் பற்றி நான் ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்துகொண்டேன். எனது வலியையும் கண்ணீரையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை. என்னை அழைக்காமலோ அல்லது எனது தரப்பு வாதங்களைக் கேட்காமலோ, உச்ச நீதிமன்றம் இரண்டாவது முறையாக இத்தகைய உத்தரவைப் பிறப்பித்திருப்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.
எனக்கு 19 வயதாக இருந்தபோது எனது உலகம் சிதைந்து போனதாகக் கருதினேன். எனது மகள், குடும்பம், வீடு மற்றும் மனித குலத்தின் மீதான நம்பிக்கை என அனைத்தையும் நான் இழந்தேன்.
கடந்த 24 ஆண்டுகளாக, எனக்காகவும், அநீதிக்கு ஆளான அனைத்துப் பெண்களுக்காகவும் நான் நீதிக்காகப் போராடி வருகிறேன். பல ஆண்டுகளாக நான் நீதிமன்றத்திற்குச் சென்று வந்தபடி உள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு நீதி கிடைத்தபோது நீதித்துறையின் மீதான நம்பிக்கை மீண்டும் வலுப்பெற்றதாக நம்பினேன்.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, பழைய அச்சங்களை மீண்டும் கொண்டு வந்துள்ளது. எனது பாதுகாப்புக்கும், எனது குடும்பத்தினரின், குறிப்பாக எனது குழந்தைகளின் பாதுகாப்புக்கும் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகிறேன்.
நீதித்துறையின் மீதான எனது நம்பிக்கை தகர்ந்துவிடுமோ என்ற அச்சமும் எனக்கு உள்ளது. எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அன்பினாலும் ஆதரவினாலும் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் எனது வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்தேன்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக எனது போராட்டத்தைத் தொடர்வேன். எனது குழந்தைகளுக்காக அவர்கள் வாழ்நாள் முழுவதையும் அச்சத்திலும் பீதியிலும் கழிக்க வேண்டிய சூழல் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.
இந்தப் போராட்டம் என்னுடையது மட்டுமல்ல. நீதி, கண்ணியம் மற்றும் சமத்துவத்துக்காக மீண்டும் மீண்டும் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணின், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குடிமகனின் போராட்டம் இது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.