கோப்புப் படம்
புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள பாஜக அரசு திறமையற்றது என்றும், தனது 24 ஆண்டுகால ஆட்சியில் கவனமாக கட்டமைக்கப்பட்ட மாநிலத்தின் நற்பெயரை மாநில அரசு சீர்குலைத்துவிட்டது என்றும் நவீன் பட்நாயக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒடிசாவின் சமூக சீர்திருத்தவாதியான உத்கல்மணி பண்டிட் கோபபந்து தாஸின் 149-வது பிறந்த நாளை முன்னிட்டு பிஜு ஜனதா தள தலைவரும் முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, புவனேஸ்வர் நகரில் மக்கள் தொடர்பு பயணத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியது: “பிஜு ஜனதா தளம் (பிஜேடி) சேவை மற்றும் வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட கட்சி. பிஜேடி ஆட்சியின்போது, விரைவான வளர்ச்சிக்கான ஒரு முன்மாதிரி மாநிலமாக ஒடிசா திகழ்ந்தது.
ஆனால், திறமையற்ற டபுள் இன்ஜின் அரசு, வெறும் இரண்டரை ஆண்டுகளில் மாநிலத்தின் நற்பெயரை முழுமையாக சீர்குலைத்துவிட்டது.
இந்த டபுள் இன்ஜின் அரசின் தோல்விகள் குறித்த செய்தியை ஒவ்வொரு வீட்டுக்கும் நீங்கள் (தொண்டர்கள்) கொண்டு செல்ல வேண்டும். இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் பேசினார்.