

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள சொகுசு விடுதியில் சுமார் 40 அடி உயர ஜிப்லைன் அறுந்து விழுந்ததில் 24 வயது இளைஞர் படுகாயம் அடைந்தார்.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள தாண்டேலியில் தனியார் சொகுசு விடுதி இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜயப்புராவை சேர்ந்த குபேர் சுரபுரா (24) தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவர் விடுதியில் உள்ள ஜிப்லைன் சாகச விளையாட்டில் ஈடுபட்டார்.
அப்போது இரும்பு கயிறு அறுந்து விழுந்ததில் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விபத்தில் காயமடைந்த குபேர் சுரபுரா உத்தர கன்னடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கை, கால், இடுப்பு, தோள் உள்ளிட்ட இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் சொகுசு விடுதி நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனர். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பராமரிப்பு இல்லாமல் சாகச விளையாட்டை நடத்தியதாக விடுதி நிர்வாகத்தின் மீது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இது குறித்து விடுதி நிர்வாகம் கூறும்போது, ”எதிர்பாராத விதமாக விபத்து நடந்துவிட்டது. அதற்காக வருந்துகிறோம். பாதிக்கப்பட்ட இளைஞரின் மருத்துவ செலவை ஏற்கிறோம். விபத்து நிகழ்ந்த நேரத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந்துவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.