

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் இன்று 7-வது உலக திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து, திருவள்ளுவர் சங்கத் தலைவர் எஸ்.டி.குமார் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகம், தாய்மொழி கூட்டமைப்பு மற்றும் திருவள்ளுவர் சங்கம் இணைந்து இன்று (ஜூலை 5) 7-வது உலக திருக்குறள் மாநாட்டை நடத்துகின்றன. செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டை தமிழக அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு தொடங்கி வைக்கிறார். காலை 10 மணிக்கு தொடங்கி 3 அரங்கங்களில் மாலை 6 மணி வரை மாநாடு நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், ஸ்ரீநாத், இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, கன்னட ரக்சன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா, செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விக்டர் லோபோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மாநாட்டின் தொகுப்பு நூலாக, `திருக்குறள் உணர்த்தும் உலக அமைதியும் மாந்தநேய மாண்புகளும்' என்ற தலைப்பிலான நூலை மயில்சாமி அண்ணாதுரை வெளியிடுகிறார்.
இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் திருக்குறள் தொடர்பான தங்களின் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். கன்னடம், துளு, கொங்கனி உள்ளிட்ட மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
மொழிபெயர்ப்பு பணிகளை மேற்கொண்ட எழுத்தாளர்கள் பாராட்டி கவுரவிக்கப்படஉள்ளனர். இம்மாநாட்டில் கர்நாடகா, தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்கின்றனர்.