பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சித் தேர்தல் மின்னணு இயந்திரங்களுக்குப் பதிலாக, மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் என கர்நாடக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சித் தேர்தலை வருகிற ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து மாநகராட்சி தேர்தல் பணிகளை ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத ஆகிய பிரதான கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன.
இந்நிலையில், கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் ஜி.எஸ்.சங்கரேஷி திங்கள்கிழமை பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியது: 'கிரேட்டர் பெங்களூரு' அமைப்பின் கீழ் இயங்கும் 5 மாநகராட்சிகளுக்கும் வருகிற மே 25-ம் தேதிக்குப் பிறகு தேர்தல் நடத்தப்படும்
கடந்த ஆண்டு கர்நாடக அரசு உள்ளாட்சி தேர்தல்கள் வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது. அதன்படி, பெங்களூரு மாநகராட்சி தேர்தல் இந்த முறை மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையிலே நடத்தப்படும்.
மின்னணு வாக்கு இயந்திரம் மூலமாக தேர்தல் நடத்த வேண்டும் என சட்டம் எதுவும் இல்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் எவ்வித ஆணையும் பிறப்பிக்கவில்லை.
எனவே 30 ஆண்டுகளுக்கு பிறகு வாக்கு சீட்டு முறைப்படி தேர்தல் நடத்த இருக்கிறோம். வாக்குச்சீட்டு முறை என்பது மிக பழமையானது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இன்னும் வாக்குச்சீட்டு முறை பயன்பாட்டில் இருக்கிறது. இந்த முறையால் எவ்வித சிரமும் இல்லை.
கிரேட்டர் பெங்களூரு அமைப்பில் உள்ள 5 மாநகராட்சிகளிலும் மொத்தமாக 369 வார்டுகள் உள்ளன. இதில் மொத்தம் 88 லட்சத்து 91 ஆயிரத்து 411 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 45 லட்சத்து 69 ஆயிரத்து 193 பேர், பெண்கள் 45 லட்சத்து 20 ஆயிரத்து 583 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 1,635 பேர் ஆவர். தேர்தலை சீராக நடத்த மொத்தம் 8,044 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன” என்று அவர் தெரிவித்தார்.