

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 10 குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி வேன் ஒன்று ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அதன் மீது ரயில் மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள கர்ண சுபர்ணா ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள ரயில்வே கிராசிங்கில் இன்று காலை 7 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டாடா சுமோ வேனில் பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற வேன், ரயில்வே கேட் திறந்து இருந்ததால் அதன் வழியாக தண்டவளாத்தைக் கடக்க முயன்றபோது அதன் மீது ரயில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இதில், மதிவண்டியில் சென்ற ஒருவரும் சிக்கியுள்ளார். விபத்தை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அப்பகுதி மக்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டதோடு, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களில் மூவர், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே மற்றும் கேட் கீப்பரின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், கேட் கீப்பர் போதையில் இருந்திருக்கலாம் என்றும் உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.
விபத்து குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை அடுத்து, அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த சம்பவம் மனதை உலுக்கும் நிகழ்வு என்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சுகந்த மமஜும்தார் தெரிவித்துள்ளார்.
“எந்தவொரு உயிர் இழப்பும் துயரமானதுதான்; ஆனால், குழந்தைகளின் மரணம் இன்னும் அதிக மனவேதனை அளிப்பதாகும். இது குறித்து விரிவான விசாரணை அவசியம்; ரயில்வே நிர்வாகம் இது தொடர்பாகத் தனிப்பட்ட விசாரணை ஒன்றை மேற்கொள்ளும் என்று நான் நம்புகிறேன்.” என்று சுகந்த மமஜும்தார் தெரிவித்துள்ளார்.