

பாட்னா: பிஹாரின் தர்பங்கா மாவட்டம், அலிநகர் அருகே உள்ள கிராத்பூர் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியின் கட்டிடம் மிகவும் மோசமாக சேதமடைந்து உள்ளது. அண்மையில் கட்டிடத்தின் ஒரு தூண் இடிந்து விழுந்தது.
இதைத் தொடர்ந்து மாணவர்களின் இருக்கைகள், பெஞ்சுகள், செங்கற்கள் ஆகியவற்றை அடுக்கி கட்டிடம் கீழே சரியாமல் இருக்க தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து உள்ளூர் மக்கள், ஆசிரியர்கள் கூறியதாவது: கிராத்பூர் அரசு ஆரம்பப் பள்ளியில் 190 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். 10 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது பள்ளியில் 2 அறைகள் மட்டுமே உள்ளன. இதில் ஓர் அறை அலுவலகப் பணிக்காக பயன்படுத்தப்படுகிறது.
மற்றொரு அறையில் 191 மாணவ, மாணவியரும் அமர வைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. பள்ளி கட்டிடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. அண்மையில் ஒரு தூண் இடிந்து விழுந்தது. இதனால் பெஞ்சுகள், தூணாக மாற்றப்பட்டு உள்ளது. மழைக்காலங்களில் பள்ளிக் கட்டிடம் ஒழுகுகிறது. பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். போதிய வகுப்பறைகளை கட்ட வேண்டும். இவ்வாறு உள்ளூர் மக்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பிஹாரின் அலிநகர் தொகுதி எம்எல்ஏவாக மைதிலி தாக்குர் பதவி வகிக்கிறார். கிராத்பூர் பள்ளி கட்டிடத்தின் அவலநிலை குறித்து சட்டப்பேரவையில் அவர் எடுத்துரைத்தார்.
இதைத் தொடர்ந்து பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட பிஹார் அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறும்போது, “பள்ளியில் 191 மாணவர்கள் படிப்பதாக கணக்கு காட்டப்பட்டு உள்ளது. ஆனால் எங்களது ஆய்வில் 50 மாணவர்கள் மட்டுமே வருகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி வேறு கட்டிடத்தில் பள்ளி செயல்படுகிறது. விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும்" என்றனர்.