பாராமதி விமான விபத்து: இருவர் உயிர் தப்பினர்

பாராமதி விமான விபத்து: இருவர் உயிர் தப்பினர்
Updated on
1 min read

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி விமான ஓடுதளத்தில் நேற்று தரையிறங்க முயன்ற தனியார் நிறுவனத்தின் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து புனே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீப் சிங்கில் கூறியதாவது: ‘கார்வர் ஏவியேஷன்’ என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான 'செஸ்னா 172' என்ற பயிற்சி விமானம் பாராமதி ஓடுதளத்தில் நேற்று பிற்பகல் 12:30 மணியளவில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சறுக்கித் தரைதட்டியது. விமானத்தில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதா அல்லது மனிதத் தவறுகள் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாராமதி விமான ஓடுதளப் பகுதியில் அடுத்தடுத்து நிகழும் விமான விபத்துகள் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே பாராமதி ஓடுதளத்தில் கடந்த ஜனவரி மாதம் ‘வி.எஸ்.ஆர். வென்ச்சர்ஸ்’ நிறுவனத்தின் 'லியர்ஜெட் 45' ரக விமானம் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த தேசியவாத காங்கிரஸ் முன்னாள் தலைவர் அஜித் பவார், அவரது பாதுகாவலர், விமானிகள் சுமித் கபூர், சாம்பவி பதக் ஆகிய 4 பேரும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பான இறுதி அறிக்கையை விமான விபத்து விசாரணை வாரியம் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய காலத்தில் அடுத்தடுத்து விமான விபத்துகள் நேரிட்டு வருவதால், பாராமதி ஓடுதளத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களின் பராமரிப்பு முறைகள் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பாராமதி விமான விபத்து: இருவர் உயிர் தப்பினர்
வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எப்சிஆர்ஏ மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in