

புதுடெல்லி: ஹைதராபாத் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறை நடத்திய தாக்குதலுக்கு எதிரான மனுவை தலைமை நீதிபதி சூரிய காந்த் அமர்வு அவசரமாக விசாரிக்க மறுத்ததாகக் கூறி, 2026-ம் ஆண்டு தேர்ச்சி பெறும் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தலைமை நீதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினர்.
இதற்குப் பதிலடியாக, ஹைதராபாத் தேசிய சட்டப்பல்கலைக் கழகத்தின் 2026-ம் ஆண்டு பிரிவு மாணவர்களை வழக்கறிஞர்களாகப் பதிவு செய்யத் தடை விதிக்கப்படுவதாக இந்திய பார் கவுன்சில் அறிவித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "1961-ம் ஆண்டின் வழக்கறிஞர்கள் சட்டத்தின் கீழ் பார் கவுன்சிலுக்கு, சட்டக் கல்வி பயிலும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வழங்கப்படவில்லை. ஒரு மாணவர் சட்டப்படிப்பை முடித்து, அதிகாரப்பூர்வமாக வழக்கறிஞராகப் பதிவு செய்த பின்னரே, பார் கவுன்சிலின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறார்.
மாணவர்கள் தரப்பில் தவறு இருந்தாலும் அவர்களுக்குப் போராட உரிமை உண்டு. எனவே, இந்த விவகாரத்தில் தலையிட இந்திய பார் கவுன்சிலுக்கு எந்த உரிமையும் இல்லை" என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்திய பார் கவுன்சில் தனது சுற்றறிக்கையை ஏற்கனவே திரும்பப் பெற்று விட்டதால், இந்த விவகாரத்தை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர்.