

புதுடெல்லி: மாணவர்களின் தொடர் போராட்டங்களால் கடந்த 2024-ம் ஆண்டில் வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
அண்மை காலமாக வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக இந்தியாவுக்கான வங்கதேச தூதர் ஹமீதுல்லாவை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத் துறை பலமுறை கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்த சூழலில் வங்கதேச இடைக்கால அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கான வங்கதேச தூதர் ஹமீதுல்லா நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து அவசரமாக டாக்கா சென்றார்.
இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவது தொடர்பாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸை அவர் சந்தித்து பேசுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.