

புதுடெல்லி: உ.பி.யின் பரேலி நகரில் ராணுவக் குடியிருப்பு பகுதியில் செயின்ட் அல்போன்சஸ் கதீட்ரல்தேவாலயம் உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நேற்று பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஒரு கிறிஸ்தவப் பள்ளி மாணவர்களால் ஆட்சேபனைக்குரிய நாடகம் அரங்கேற்றப்பட்டதாக புகார் எழுந்தது. இந்து மதம் மற்றும் சமூகத்தை தவறாகச் சித்தரித்து அவமானப்படுத்த முயன்றதாக கூறி அந்த தேவாலயம் முன் பஜ்ரங் தளம் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேவாலயத்தின் பிரதான வாயிலில் நின்று, அனுமன் மந்திரங்களை ஓதி, ஜெய் ஸ்ரீராம், ஹர் ஹர் மகாதேவ் உள்ளிட்ட முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் உருவானதால் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, பஜ்ரங் தளம் நிர்வாகிகள் காவல் ஆணையரிடம் அளித்த மனுவில், இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தவும், மத உணர்வுகளைப் புண்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். ஹரியானாவின் ஹிசார் நகரில் 160 ஆண்டுகள் பழமையான செயின்ட் தாமஸ் தேவாலயம் உள்ளது. இதற்கு நேர் எதிரிலுள்ள கிராந்திமான் பூங்காவில் ‘இந்து சக்தி சங்கமம்’ எனும் பெயரில் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் ஒரு நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் சுவாமி ஸ்ரத்தானந்தா எனும் துறவியின் தியாக தினத்தை நினைவுகூரும் வகையில் ஹோமம் நடத்தி, அனுமன் மந்திரங்கள் ஓதப்பட்டன.
அப்போது கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைக்கு வந்த கிறிஸ்தவர்கள் திரளாகக் கூடி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
பிறகு நிலைமையை கட்டுப்படுத்த இரு டி.எஸ்.பி.க்கள் சமரசத்திற்காக நியமிக்கப்பட்டனர், தொடர்ந்து நீடிக்கும் பதற்றத்தை தணிக்க மேலும் 3 கம்பெனியின் சுமார் 250 காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.