

சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி
புட்டபர்த்தி: இந்திய நாகரீகத்தின் மையமே சேவைதான் என்று புட்டபர்த்தியில் நடைபெற்ற சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஆந்திரப்பிரதேசத்தின் புட்டபர்த்தியில் உள்ள சத்திய சாய் பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் இந்த பிறந்தநாள் நூற்றாண்டு ஆண்டு, நமது தலைமுறைக்கு ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல; இது ஒரு தெய்வீக ஆசிர்வாதம். அவர் இப்போது நம்மிடையே இல்லை என்றாலும், அவரது போதனைகள், அவரது அன்பு மற்றும் அவரது சேவை மனப்பான்மை தொடர்ந்து லட்சக்கணக்கானவர்களை வழிநடத்துகிறது.
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை "வசுதைவ குடும்பகம்" என்பதன் உயிருள்ள உருவகமாக இருந்தது. எனவே, இந்த பிறந்தநாள் நூற்றாண்டு, நமக்கு உலகளாவிய அன்பு, அமைதி மற்றும் சேவையின் ஒரு மகத்தான விழாவாக மாறியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் 100 ரூபாய் நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டது நமது அரசாங்கத்தின் அதிர்ஷ்டம். இந்த நாணயம் மற்றும் தபால் தலை அவரது சேவையை பிரதிபலிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பக்தர்கள் மற்றும் பாபாவின் சீடர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய நாகரிகத்தின் மையம் சேவையே. நமது பல்வேறு ஆன்மீக மற்றும் தத்துவ மரபுகள் அனைத்தும் இறுதியில் இந்த ஒரு லட்சியத்துக்குத்தான் இட்டுச் செல்கின்றன. ஒருவர் பக்தி, ஞானம் அல்லது கர்மாவின் பாதையில் நடந்தாலும், ஒவ்வொன்றும் சேவையுடனே இணைக்கப்பட்டுள்ளன. அனைத்து உயிரினங்களிலும் உள்ள தெய்வீக இருப்புக்கு சேவை செய்யாமல் பக்தியால் என்ன பயன்? மற்றவர்களிடம் இரக்கத்துடன் நடந்து கொள்ளவில்லை என்றால் ஞானத்தால் என்ன பயன்? வேலையை சமூகத்திற்கு சேவையாக வழங்கும் மனப்பான்மை இல்லையென்றால் கர்ம மார்க்கத்தில் சென்று என்ன பயன்?
பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் இந்த நெறிமுறைகள் இந்தியாவை நிலைநிறுத்தியுள்ளன. இது நமது நாகரிகத்திற்கு உள் வலிமையைக் கொடுத்துள்ளது. நமது பல பெரிய துறவிகள் மற்றும் சீர்திருத்தவாதிகள் தங்கள் காலத்திற்கு ஏற்றவாறு இந்த காலத்தால் அழியாத செய்தியை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். ஸ்ரீ சத்ய சாய் பாபா சேவையை மனித வாழ்க்கையின் மையத்தில் வைத்தார். அவர் அடிக்கடி, "அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய்" என்று கூறினார். அவருக்கு, சேவை என்பது அன்புடன் செயல்புரிவது. கல்வி, சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு மற்றும் பல துறைகளில் அவரது நிறுவனங்கள் இந்த தத்துவத்தின் உயிருள்ள சான்றுகளாக திகழ்கின்றன. அவை ஆன்மிகமும் சேவையும் தனித்தனியானவை அல்ல, ஒரே உண்மையின் வெவ்வேறு வெளிப்பாடுகள் என்பதைக் காட்டுகின்றன.
ஒருவர் உடல் ரீதியாக நம்முடன் இருக்கும்போது மக்களை ஊக்குவிப்பது அசாதாரணமானது அல்ல. ஆனால் பாபாவால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் சேவைப் பணிகள், அவர் உடல் ரீதியாக நம்முடன் இல்லாவிட்டாலும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது உண்மையிலேயே சிறந்த ஆன்மாக்களின் தாக்கம் குறையாது, உண்மையில் வளர்கிறது என்பதைக் காட்டுகிறது.
இன்று, நாடு கடமை உணர்வுடன் வளர்ந்த இந்தியாவை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த இலக்கை அடைய குடிமக்களின் பங்களிப்பு அவசியம். சத்திய சாய் பாபாவின் இந்த பிறந்தநாள் நூற்றாண்டு நமக்கு ஒரு சிறந்த உத்வேகமாகும். வளர்ந்த இந்தியாவை உருவாக்க, உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும். உள்ளூர் பொருட்களை வாங்கும்போது, ஒரு குடும்பம், ஒரு சிறு நிறுவனம் மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலியை நேரடியாக மேம்படுத்துகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது ஒரு சுயசார்பு இந்தியாவுக்கு வழி வகுக்கும்" என தெரிவித்தார்.
சத்திய சாய் பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, புட்டபர்த்தியில் சாலையின் இரு மருங்கிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, சத்ய சாய் பாபாவின் மகா சமாதிக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு மேற்கொண்டார். இதையடுத்து நடைபெற்ற ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில், சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனை மற்றும் அவரது சிறப்பை கவுரவிக்கும் வகையில் நினைவு நாணயத்தையும், அஞ்சல் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு, கிஷண் ரெட்டி, மாநில அமைச்சர்கள், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், திரைப் பிரபலம் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.