உ.பி.யில் பிரசவ அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர், நர்ஸ் கைது - தாய், சேய் உயிரிழந்த பரிதாபம்

உ.பி.யில் பிரசவ அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர், நர்ஸ் கைது - தாய், சேய் உயிரிழந்த பரிதாபம்
Updated on
2 min read

புது டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெண்ணுக்கு பி.ஏ பட்டதாரியும், ப்ளஸ் டூ மாணவியும் இணைந்து பிரசவ அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அந்தப் பெண்ணும், குழந்தையும் உயிரிழந்தப் பின் வெளியான செய்தியால் இருவரும் கைதாகியுள்ளனர்.

உ.பி.யின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ளது பஸ்கரி பகுதி. இங்கு நவ்ஜீவன் எனும் தனியார் மருத்துவமனையை ரூபி என்பவர் நடத்தி வந்துள்ளார். இதில் பிரியங்கா என்ற பெண்ணுக்கு கடந்த வாரம் பிரசவம் பார்க்கப்பட்டது.

இந்த பிரசவத்தின் அறுவை சிகிச்சையை பி.ஏ பட்டதாரியான யோகேஷ் (32) நடத்தி உள்ளார். தன்னை மருத்துவர் எனக் கூறிக் கொண்டவருடன் ப்ளஸ் டூ பயின்றவரான சுபம் விஸ்வகர்மா (19) செவிலியராக இருந்துள்ளார். அதில் இளம்பெண்ணானப் பிரியங்கா தனது குழந்தையுடன் பரிதாபமாகப் பலியாகி உள்ளார். இதன் மீது பெண்ணின் கணவர் சந்தீப் செய்த புகாரை அடுத்து வழக்குப் பதிவாகி விசாரணை நடைபெற்றது.

இதையடுத்து உடனடியாக விசாரணையை துவக்கிய போலீஸார் நவ்ஜீவன் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். அந்த மருத்துவமனை, எந்த விதமானப் பதிவும் இல்லாமல் துவக்கப்பட்டிருந்தது.

போலி மருத்துவரும், செவிலியருமான மாலிபூரைச் சேர்ந்த யோகேஷ் மற்றும் சுல்தான்பூரைச் சேர்ந்த சுபம் விஸ்வகர்மா ஆகியோர் பஸ்கரி பஜாரில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், யோகேஷின் தந்தை பகவன்தாஸ் ஜலால்பூர் அரசு பொதுநல சுகாதார மையத்தில் வார்டு பாய் பணியில் இருந்துள்ளார். அவர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

தந்தையுடன் வசிக்கும் போது, மகன் யோகேஷ் அங்குவரும் நோயாளிகள் சிகிச்சைகளைப் பார்த்து அதை கற்கத் துவங்கி உள்ளார். அறுவை சிகிச்சைகளையும் பார்த்து அறிந்தவர், தன்னை மருத்துவர் எனக் கூறத் துவங்கியுள்ளார். போலி சான்றிதழ்களுடன் பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் அவர் பணியாற்றி உள்ளார்.

சுபமின் தந்தையான விஜய் விஸ்வகர்மா, அருகிலுள்ள சுல்தான்பூரில் பெல்வாய் அகண்ட் நகரில் தனியாக பஜ்ரங்கி நர்சிங் ஹோமை நடத்துகிறார். இங்கு தான் யோகேஷ் அறுவை சிகிச்சைகளைப் பார்த்து அவற்றை செய்யத் துவங்கி உள்ளார். விஜயின் மகள் சுபம் விஸ்கர்மாவை தனது உதவியாளராக வைத்து நவ்ஜீவன் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்தவர் சிக்கியுள்ளார்.

இதனிடையே, அம்பேத்கர் நகரின் அக்பர்பூர், ஜலால்பூர், பஸ்கரி மற்றும் ஜஹங்கீர்கன்ஞ் பகுதியின் தனியார் மருத்துவமனை பிரசவங்களில் இறக்கும் தாய், சேய் எண்ணிக்கை அதிகரிப்பதாகப் புகார் எழுந்தது.

இதன் மீது மாவட்ட ஆட்சியர் அனுபம் சுக்லா மாவட்ட தலைமை மருத்துவர் டாக்டர் சஞ்சய் குமார் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை கடந்த வருடம் ஏப்ரலில் அமைத்து விசாரணை நடத்தினார். ஜனவரியில் சமர்ப்பிக்கப்பட்ட இதன் அறிக்கையில், தனியார் மருத்துவமனைகளைப் போலவே, அரசு மருத்துமனைகளின் பிரசவ அறுவை சிகிச்சைகளிலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அறிக்கை அளித்திருந்தது.

இதையடுத்து அனைத்து தனியார் மருத்துவமனை மற்றும் அவற்றில் பணியாற்றும் மருத்துவர்களின் பதிவு, சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதன் விசாரணையில், நவ்ஜீவன் மருத்துவமனை எப்படியோ சிக்காமல் தப்பி இருந்துள்ளது. தலைமறைவாகி விட்ட இதன் உரிமையாளர் ரூபியை அம்பேத்கர் நகர் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

உ.பி.யில் பிரசவ அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர், நர்ஸ் கைது - தாய், சேய் உயிரிழந்த பரிதாபம்
“இலங்கை நீதிமன்றம் விடுவித்த பிறகும் 9 தமிழக மீனவர்களை மீட்கவில்லை” - சீமான் கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in