

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில்-பாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் புதிய மசூதி கட்ட அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நிதி நெருக்கடி காரணமாக மசூதி கட்டுமான அளவை 3,500 அடியாக குறைத்ததுடன் அதன் வடிவிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.
ராமர் கோயில்-பாபர் மசூதி வழக்கில் கடந்த நவம்பர் 19, 2019- ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் முஸ்லிம் தரப்பிற்கு பாபர் மசூதிக்கு பதிலாக அயோத்தியின் அருகிலுள்ள தனிபூரில் 5 ஏக்கர் நிலம் மசூதி கட்ட ஒதுக்கப்பட்டது. இதில், மசூதியுடன் நூலகம், மருத்துவமனை, தங்கும் விடுதி கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கான பணியில் இறங்கிய, இந்தோ-இஸ்லாமிக் கல்ச்சுரல் பவுண்டேஷன் அறக்கட்டளைக்கு போதிய நிதி கிடைக்கவில்லை. இதனால், மசூதியின் அளவை 3,500 அடியாகக் குறைத்து அதன் வடிவமைப்பிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.
தனிபூரின் மசூதிக்கான நிலப் பயன்பாட்டுச் சான்றிதழ் உபி அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டு இன்னும் கிடைக்கவில்லை. இந்த சான்றிதழ் கிடைத்ததும், மசூதிக்கான வரைபடம் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படும். இந்தோ-இஸ்லாமிக் கல்ச்சுரல் பவுண்டேஷன் அறக்கட்டளை் தலைவர் ஜுஃபர் அகமது ஃபரூக்கி கூறுகையில்,’நிதி பற்றாக்குறையால் மசூதியின் அளவும் வடிவமைப்பும் மாற்றப்பட்டுள்ளன. இ்த்திட்டத்திற்கு ரூ.300 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் திருத்தப்பட்ட வடிவமைப்பின்படி கட்டுமானச் செலவு சுமார் ரூ.5 கோடியாகக் குறையும். தற்போது அறக்கட்டளையிடம் ரூ.15 லட்சம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள நிதியைத் திரட்டுவதற்காக நிதி திரட்டும் பிரச்சாரம் தொடங்கப்படும். மசூதியின் உட்புறப் பரப்பு 3,500 சதுர அடியாகவும், ஒட்டுமொத்த வளாகம் 15,000 சதுர அடியாகவும் இருக்கும்’ எனத் தெரிவித்தார்.