

புதுடெல்லி: உ.பி.யின் பிரயாக்ராஜ், திரிவேணி சங்கமத்தில் மகர மேளா நடைபெறுகிறது.
இங்கு கடந்த ஜனவரி 18, மவுனி அமாவாசை நாளில் உத்தராகண்ட் மாநிலம் ஜோதிஷ்வர் மடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் தனது சீடர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் கங்கை நதியில் புனித நீராட பல்லக்கில் வந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் அதிக கூட்டம் காரணமாக புனித நீராடலுக்கு நடந்தே செல்ல வலியுறுத்தினர்.
அப்போது அவரது ஆதரவாளர்களுடன் தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து உள்ளூர் நிர்வாகத்தைக் கண்டித்து அவிமுக்தேஷ்வர் தனது முகாமில் தர்ணா நடத்தி வந்தார். இந்நிலையில் அவிமுக்தேஷ்வர் நேற்று முன்தினம் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “மகர மேளாவில் இருந்து நான் கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன். இங்கு நான் பட்ட இன்னல்கள் மற்றும் வேதனைகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. சங்கமத்தில் நீராடுவது என்பது உள்ளத்தின் திருப்திக்கான ஒரு வழி. ஆனால் எனது மனம் மிகவும் வருத்தத்தில் இருப்பதால் நீராடாமலேயே இங்கிருந்து செல்கிறேன்” என்றார்.
இதுகுறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தளத்தில், "சனாதன மரபுகளுக்கு பாஜக பெரும் தீங்கு விளைவிக்கிறது. பண்டைய காலம் முதலாக தொடரும் ஒரு மரபை பாஜக முறித்துவிட்டது. ஊழல் வழியில் பெற்ற அதிகாரத்தின் பெருமையால் பாஜக போதையில் இருக்கிறது. துறவிகளின் மனதைப் புண்படுத்துவது நன்மையை அளிக்காது. துறவிகளின் இதயங்களைப் புண்படுத்துவதன் மூலம் யாரும் மகிழ்ச்சி அடைய முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.