

நான்டெட்: அகாலி தளம் கட்சித் தலைவரும், பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதல், தனது குடும்பத்தினருடன் மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் நகருக்கு நேற்று சென்றிருந்தார்.
பிற்பகல் 1.45 மணியளவில் அங்கு உள்ள குருத்வாரா மாதா சாஹிப் தேவான் ஜி முகத் பகுதியில் சென்று கொண்டிருந்த சுக்பீர் சிங்கை ஒருவர் கத்தியால் தாக்கியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்போது, அவரது மனைவியும், அகாலி தளம் எம்.பி.யுமான ஹர்சிம்ரத் கவுர் பாதலும் உடன் இருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த சுக்பீர் சிங் பாதல் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில் பாதலின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவரும் காயமடைந்தார். இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சுக்பீர் சிங் பாதலை தொலை பேசியில் தொடர்புகொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
தாக்குதல் சம்பவம் குறித்த தகவல்களை நான்டெட் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முதல்வர் பட்னாவிஸ் கேட்டறிந்தார். மேலும், தாக்குதலுக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பின்னர் வெளியான காணொலியில், சுக்பீர் சிங் பாதல் தனது வலது கையில் காவி நிறத் துணியைக் கட்டியபடி நடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2024-ல் அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் வளாகத்துக்கு வெளியே சுக்பீர் சிங் பாதலை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்றார். இதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.