பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்
Updated on
1 min read

புதுடெல்லி: டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

இந்திய டென்னிஸ் நட்சத்திரமான லியாண்டர் பயஸ், கடந்த 2021-ல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2022-ல் நடைபெற்ற கோவா தேர்தலில் அக்கட்சிக்காக அவர் பிரச்சாரம் செய்தார். எனினும், அவர் தேர்தல்களில் போட்டியிடவில்லை.

இந்நிலையில், லியாண்டர் பயஸ் சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை கொல்கத்தாவில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர், பாஜகவில் இணையக்கூடும் என செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு வருகை தந்த லியாண்டர் பயஸை, மத்திய அமைச்சர் சுகந்த மஜும்தார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.

லியாண்டர் பயஸ் பாஜகவில் இணைந்ததை அடுத்துப் பேசிய கிரண் ரிஜிஜு, “ஜாம்பவான் லியாண்டர் பயஸுக்குத் தனி அறிமுகம் எதுவும் தேவையில்லை. அவர் யார் என்பதை நாடு நன்கு அறியும். இருப்பினும், இன்று லியாண்டர் பயஸ் பாஜக குடும்பத்தில் இணைந்திருப்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். கடந்த 12 ஆண்டுகளாக விளையாட்டுத் துறைக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் பிரதமர் மோடி ஆற்றிய பணிகளால் ஈர்க்கப்பட்டு, லியாண்டர் பயஸ் பாஜகவில் இணைந்துள்ளார்..." என்று குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர் சுகந்த மஜும்தார்,“டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸை பாஜகவிற்கு வரவேற்கிறேன். இன்று எங்களுக்கு ஒரு மிகச்சிறந்த நாளாகும். தனது டென்னிஸ் திறமையின் மூலம் அவர் மேற்கு வங்க இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறார். வரவிருக்கும் தேர்தல்களில், அவர் எங்கள் கட்சிக்கு பெரும் பலம் சேர்ப்பார். தற்போது ஒரு 'காவி அலை' வீசத் தொடங்கியுள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறி இது. லியாண்டர் பயஸ், 19-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற வங்க கவிஞரும் நாடக ஆசிரியருமான மைக்கேல் மதுசூதன் தத்தின் நேரடி வாரிசு ஆவார்.” என தெரிவித்தார்.

கொல்கத்தாவில் பிறந்த லியாண்டர் பயஸ், ஒலிம்பிக், விம்பிள்டன், யுஎஸ் ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன், ஃபிரென்ச் ஓபன் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்
பிஹார் கோயில் கூட்ட நெரிசல் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in