

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு அசாமில் வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது.
அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிவசாகர் மாவட்டத்தில் இருவர் மற்றும் கோலாகாட்டில் ஒருவர் என நேற்று மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மாநிலத்தில் வெள்ளம் தொடர்பான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 78-ஐ எட்டியுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசு அறிக்கையின்படி, சிவசாகர், சாரைடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நாகான், பிஸ்வநாத் மற்றும் காம்ரூப் ஆகிய ஏழு மாவட்டங்களில் வெள்ளத்தால் மொத்தம் 3,00,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் வெள்ளத்தில் 551 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, 21,523.08 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சாரைடியோ மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,37,561 பேர், அதைத் தொடர்ந்து சிவசாகரில் 84,600 பேர் மற்றும் ஜோர்ஹாட்டில் 49,911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 16,500-க்கும் மேற்பட்ட மக்கள் 71 நிவாரண முகாம்களில் தங்கியிருப்பதாகவும், 72,000-க்கும் மேற்பட்டோருக்கு 30 நிவாரண விநியோக மையங்கள் மூலம் உதவிகள் வழங்கப்படுவதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் 11,000-க்கும் மேற்பட்ட விலங்குகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மேலும் 17,000 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ மற்றும் கால்நடை மருத்துவக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமையன்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் பேசி, வெள்ள நிலைமை மற்றும் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மாநிலத்தின் நிவாரணம், சீரமைப்பு மற்றும் மறுசீரமைப்புக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அசாமில் வெள்ள நீர் தற்போது வடிந்து வரும் நிலையிலும், அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து முழுவதும் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை ஆங்காங்கே இடியுடன் கூடிய கன முதல் மிகக் கனமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.