

இடாநகர்: அசாமின் தின்சுகியா பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 8-ம் தேதி ஒரு லாரியில் அருணாச்சல பிரதேசத்துக்கு வேலைக்காக சென்றனர். ஓட்டுநர், உதவியாளர் மற்றும் 20 தொழிலாளர்கள் லாரியில் பயணம் செய்தனர்.
அருணாச்சல பிரதேசத்தின் அன்ஜா மாவட்டம், ஹயுலியாங் மலைப் பகுதியில் சென்றபோது அந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஒரு தொழிலாளி மட்டும் உயிர் தப்பினார். கடந்த 2 நாட்களாக அவர் வனப்பகுதி வழியாக நடந்து, அருணாச்சல பிரதேச மாநில பொறியாளர் பிரிவு (ஜிஆர்இஎப்) முகாமை நேற்று முன்தினம் சென்றடைந்தார். இதையடுத்து விபத்து குறித்து அருணாச்சல பிரதேச போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதன் பேரில் மாநில போலீஸார், தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணியை மேற்கொண்டனர். இதுவரை 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 3 பேரின் சடலங்களை தேடி வருகின்றனர். ஜிஆர்இஎப் பொறியாளர்கள் முகாம் அமைத்து சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.