

புதுடெல்லி: இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் அருணாச்சல் பிரதேசம், இதை யாராலும் மாற்ற முடியாது என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களுக்குச் சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் அருணாச்சலப் பிரதேசத்தை ‘ஜாங்னான்' என்றும் சீனா குறிப்பிட்டு வருகிறது.
இவ்வாறு இந்தியப் பகுதிகளுக்குச் சீன மொழியில் பெயர் சூட்டி வரும் சீனாவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய நில அளவைத் துறை அருணாச்சலப் பிரதேசத்தின் 27 இடங்களை உள்ளடக்கி இந்தியா அதிகாரப்பூர்வ வரைபடம் ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது. மேலும், அந்த இடங்களின் புவியியல் அம்சங்கள், அதிகாரப்பூர்வ இந்தியப் பெயர்கள் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள் ளன. இந்த வரைபடத்துக்கும் சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது: அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதி. இதை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது. இது மறுக்க முடியாத உண்மை.
அதே வேளையில், இந்த மறுக்க முடியாத எதார்த்தத்தை எதுவும் மாற்ற முடியாது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் அருணாச்சல் பிரதேசம் என்பதை யாராலும் மாற்ற இயலாது.
அருணாச்சல் மாநிலம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, இருக்கிறது, இனியும் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.