

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
புதுடெல்லி: பிரதமர் மோடியை பொது வெளியில் விவாதத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இந்நிலையில், இந்த விவாதத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவரை நடுவராக நியமிக்கலாம் என்று இப்போது சொல்லியுள்ளார்.
முன்னதாக, ‘பிரதமர் மோடி அவர்களே, நாட்டு மக்களிடம் பொய் சொல்வதை நிறுத்துங்கள். வெளிநாட்டு உதவியால்தான் நீங்கள் பிரதமர் ஆனீர்கள். இப்போதும் வெளிநாட்டு உதவியால்தான் பிரதமராக நீடிக்கிறீர்கள்.
உங்கள் நிதி அமைப்பு முழுமையாக வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டிலும் ஆதரவிலும்தான் உள்ளது. வெளிநாட்டு சமூக ஊடகங்கள் உங்களுக்கு முழுமையாக ஆதரவளிக்கின்றன.
இது குறித்து என்னுடன் வெளிப்படையான விவாதத்துக்கு வாருங்கள் என்று நான் உங்களுக்கு சவால் விடுக்கிறேன். எந்த மேடையிலும், எந்த நேரத்திலும் விவாதிக்க நான் தயார். துணிச்சல் இருந்தால் வாருங்கள்’ என்று நேற்று எக்ஸ் சமூக வலைதள பதிவில் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று மீண்டும் இது குறித்து ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். “நான் சவால் விடுத்து 24 மணி நேரம் கடந்துவிட்டது. எதிர்க்கட்சிகளை தேசத்துக்கு விரோதமானவர்கள் என்று நீங்கள் சொன்னீர்கள்.
யார் தேசத்துக்கு விரோதமானவர்கள்? அந்நிய சக்திகளுடன் யாருக்கு தொடர்பு உள்ளது? அது எந்த வகையான தொடர்பு? இது குறித்து எந்த இடம், எந்த மேடை என்றாலும் விவாதத்துக்கு நான் தயார். என்னுடன் விவாதியுங்கள். இதில் அச்சம் வேண்டாம். விவாதத்தை கொஞ்சம் விரைந்து அறிவியுங்கள்.
நாம் இருவரும் அந்த மேடையில் இருப்போம். அங்கு ஊடகம், தேசத்தின் இளைஞர்கள் முன்னிலையில் விவாதிப்போம். மேசையின் ஒரு பக்கம் நீங்கள், மற்றொரு பக்கம் நான். யாரை வேண்டுமானாலும் இதற்கு நடுவராக நியமியுங்கள். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை கூட நடுவராக நியமிக்கலாம். நாம் விவாதிப்போம்.
நிதி விவகாரங்கள் சார்ந்தும், அமெரிக்க ஒப்பந்தம் குறித்தும், அதானி வழக்கு முடித்து வைக்கப்பட்டது குறித்தும், எப்ஸ்டீன் கோப்புகள் என வெளிப்படையாக விவாதிக்க நிறைய விஷயங்கள் உள்ளன.
என் மீது ஏற்கெனவே சுமார் 45 அவதூறு வழக்குகளை பதிவு செய்துள்ளீர்கள். இதற்கும் சேர்த்து ஒரு அவதூறு வழக்கு பதிவு செய்யுங்கள். அது குறித்தும் நாம் விவாதிப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.