

புதுடெல்லி: டெல்லியில் இண்டியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு அக்கட்சிகளின் தலைவர்களை விமர்சித்து அனாமதேய பேனர்கள் நகர் முழுவதும் ஆங்காங்கே காணப்பட்டன.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஒன்றாக இணைந்து ஓர் உத்தியை வகுப்பதற்காக, இண்டியா கூட்டணியின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டம் நடந்த இடத்துக்கு வரும் வழியில் சாலையோரம் மற்றும் ரவுண்டானா பகுதிகளில் பல அனாமதேய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
சிறிய அளவிலான இந்த பேனர்களில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து, மிகவும் அவதூறான கருத்துகளும் இடம்பெற்றிருந்தன. இந்த பேனர்களில் மிகச் சுருக்கமாக இந்தியிலும், ஆங்கிலத்திலும் இடம்பெற்ற ஓரிரு வாசகங்கள் எதிர்க்கட்சிகளை விமர்சித்தும், கிண்டலடிக்கும் வகையிலும் இருந்தன.
ராகுல் காந்தியின் புகைப்படம் அடங்கிய போஸ்டர் ஒன்றில், ’பிஹார் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து 59 நாட்கள் விலகி இருந்துவிட்டு, அவர் வெளிநாட்டில் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனுடன் கைகளில் பை மற்றும் பெட்டியுடன் ராகுல் செல்வது போல் ஒரு புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால், தேஜஸ்வி, அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே இவர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் படமும் இடம்பெற்று ஒரு பேனர் இருந்தது. அதில், ‘வெற்றி பெற்றால் தேர்தல் ஆணையத்துக்கு கைதட்டல், தோல்வி அடைந்தால் அதை ஒழிக்க வேண்டும் எனக் குரல்’ என்ற வகையில் விமர்சிக்கப்பட்டிருந்தது.
ஒரு சுவரொட்டியில் அகிலேஷ் யாதவின் கருத்து ஒன்று இடம்பெற்றிருந்தது; அதில், 2012-ல் தனது கட்சி பெற்ற வெற்றிக்கு தேர்தல் ஆணையத்தைப் பாராட்டிய அவர், 2017-ல் அக்கட்சி சந்தித்த தோல்விக்கு அதே தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதையும் குறிப்பிடும் வகையில் இருவகையான புகைப்படங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்த அனாமதேய பேனர்களால் இண்டியா கூட்டணியின் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அரசியல் விவாதங்கள் எழும்பின. எதிர்க்கட்சித் தலைவர்கள் குறித்த இந்த விமர்சனங்களை எழுதியது யார்? என்ற விவரம் அவற்றில் இல்லை. இதன் மீது எதிர்க்கட்சிகளும் ஏனோ எந்தப் புகாரையும் அளிக்கவில்லை.