

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பொதுமக்கள் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி வாங்குவதற்கு வசதியாக, வங்கி ஏடிஎம் போல செயல்படும் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘அன்னபூர்த்தி கிரெயின் ஏடிஎம்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், தலைநகர் ராய்ப்பூர் பிர்கான் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பயனாளிகள் 24 மணி நேரமும் தங்களுக்கான மாதாந்திர ரேஷன் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஏடிஎம் செயல்படுவது எப்படி?
பயனாளிகள் தங்களது ரேஷன் அட்டை விவரங்களை உள்ளிட்டு, கைரேகையைப் பதிவு செய்ததும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவு அரிசி இயந்திரத்திலிருந்து வெளியே வரும். இந்த இயந்திரம் சுமார் 2,500 கிலோ அரிசியை சேமித்து வைக்கும் திறன் கொண்டது.
அரிசியை இயந்திரத்தில் நிரப்புவதும், பயனாளிகளுக்கு விநியோகிப்பதும் தானியங்கி முறையில் நடைபெறும். இந்த கிரெயின் ஏடிஎம், உள்ளூர் பெண்கள் சுயஉதவிக் குழுவான ஜோதி குழுவால் இயக்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு உலக உணவுத் திட்டம் ஆதரவு அளித்து வருகிறது.