

ஆந்திர மாநில சைபர் கிரைம் போலீஸ் சிஐடி எஸ்.பி. அதிராஜ் சிங்
அமராவதி: வாட்ஸ்-ஆப், இன்ஸ்டா கிராம், டெலி கிராம் போன்ற செல்போன் செயலிகள் மற்றும் ஏஜென்ட்கள் மூலம் தெற்காசிய நாடுகளில் வேலைக்கு சென்ற இளைஞர்கள் அங்குள்ள சீன நாட்டை சேர்ந்த சைபர் மாபியா கும்பலிடம் சிக்கினர்.
தகவல் அறிந்த மத்திய அரசு அவர்களை மியான்மர் நாட்டிலிருந்து பத்திரமாக மீட்டது. மீட்கப்பட்டவர்களில் 120 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்களாவர்.
இது குறித்து, மீட்கப்பட்ட இளைஞர்களுடன் ஆந்திர மாநில சைபர் கிரைம் போலீஸ் சிஐடி எஸ்.பி. அதிராஜ் சிங் அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: படித்த இளைஞர்கள் தெற்கு ஆசிய நாடுகளான மியான்மர், தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸுக்கு ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் வரை செலவு செய்து, மிகுந்த கனவுகளோடு சென்றுள்ளனர்.
முதலில் இவர்கள் அனைவரும் தாய்லாந்துக்கு சென்றுள்ளனர். அங்கு இவர்கள் சீனா மாபியா கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஒரு கிடங்கில் அடைத்து வைத்திருந்தனர்.
பின்னர், அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இளம் பெண்களின் புகைப்படங்களுடன் கூடிய போலி கணக்குகளை தயார் செய்து, அவற்றை சமூக வலைதளங்களில் உலவ விட்டு, அதன் பின்னர், யார் இவர்களுடன் நட்பு வைத்துக்கொள்ள விரும்புகிறார்களோ, அவர்களிடம் ‘சாட்’ செய்து அவர்களை இவர்களின் வலையில் விழ வைக்க வேண்டும்.
பின்னர், 500 டாலர்கள் முதல் ஆயிரக்கணக்கான டாலர்களை அவர்களிடம் இருந்து மோசடி செய்ய வேண்டும். இதுதான் அவர்களுடைய பணி.
சிக்கிய இளைஞர்கள் தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் மத்திய அரசு முயற்சி எடுத்து அவர்களை மீட்டுள்ளது. அதன்பேரில், 3 தவணையாக அங்கு சைபர் கிரைம் மாபியா கும்பலிடம் இருந்து இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியர்கள் மட்டுமின்றி, இலங்கை, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு சிக்கியுள்ளனர். இதில் இந்தியர்கள் மட்டுமே சுமார் 10,000-க்கும் அதிகமானவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.