

அமராவதி: ‘அர்னாப்’ புயல் கடலோர ஆந்திராவை புரட்டி போட்டுள்ளது. புயல் கரையை கடந்து 2 நாட்கள் ஆகியும் இன்னமும் தாழ்வான பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பல இடங்களில் ரயில்வே தண்டவாள சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருவதால் சில ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சுமார் ரு.4,600 கோடி வரை அர்னாப் புயலால் இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.
புயலால் அதிக பாதிப்புக்குள்ளான சில பகுதிகளை சந்திரபாபு நாயுடு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மேற்கு கோதாவரி மாவட்டம், மொகலத்தூரு பகுதியில் அவர் மக்கள் தங்கி உள்ள முகாமிற்கு சென்று, அங்குள்ள வசதிகளை பார்வையிட்டு, குறைகளை கேட்டறிந்தார்.
அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து விரைவில் ஒவ்வொரு மரத்திற்கும் நஷ்டஈடு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். 24 மணி நேரத்திற்குள் மின் கம்பங்கள் அனைத்தும் சீரமைத்து, வழக்கம்போல் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும், சாலைகள் முழுவதுமாக சீரமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.