

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
நெல்லூர்: நம் நாட்டுக்கு வரும் முதலீடுகளில் 25 சதவீதம் ஆந்திராவுக்கு வருகிறது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பெருமிதம் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் புன்னபவாரி பாளையத்தில் நேற்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
எங்கள் கூட்டணி அரசு ஏழைகளுக்கு உறுதுணையாக நின்று அவர்களின் வாழ்க்கை மேம்பட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஏழ்மையை ஒழிப்பதையே ஒரே குறிக்கோளாக கொண்டு பாடுபட்டு வருகிறோம். மாதந்தோறும் 1-ம் தேதி முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உள்ளிட்டோருக்கு உதவித்தொகை வழங்குகிறோம். இதன் மூலம் 62.20 லட்சம் பேர் பயனடைகின்றனர்.
தொழில்துறை வளர்ச்சியில் ஆந்திரா மிகவும் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆந்திராவின் கூடூரில் மெகா பர்னிச்சர் பார்க் அமைய உள்ளது. இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளில் 25 சதவீதம் ஆந்திராவுக்கு வருகிறது.
ஆந்திராவில் தொழில் தொடங்கிய பலர் கடந்த ஆட்சியில் வேறு மாநிலங்களுக்குச் சென்றனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது. பலர் தொழில் தொடங்க ஆந்திராவை தேடி வருகின்றனர். அரசு நம்பிக்கையை ஏற்படுத்தி தந்ததால் தொழில் தொடங்க வரிசையில் நிற்கிறார்கள். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.