

புதுடெல்லி: நேற்றைய மக்களவை அமர்வில், மகளிர் இடஒதுக்கீடு சட்டத் திருத்தம், தொகுதி மறுவரையறை ஆணையம் அமைப்பது உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் மீது 40 நிமிட அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.
அதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: தற்போது நடைபெற்று வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதி வாரிக் கணக்கெடுப்பும் நடத்தப்படும். இங்கு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சமாஜ் வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் தர்மேந்திர யாதவ் ஆகியோர் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மத அடிப்படையில் முஸ்லிம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் கேள்விக்கே இடமில்லை. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க நமது அரசியலமைப்புச் சட்டம் ஒருபோதும் அனுமதிக்காது. மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. அது அரசியலமைப்புக்கு விரோதமானது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அதேநேரம், சமாஜ்வாதி கட்சி தனது வேட்பாளர் பட்டியலில் அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே ஒதுக்கினாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சமாஜ் வாதி உறுப்பினர்கள் கூறுகின்றனர். ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதி வாரிக் கணக்கெடுப்பையும் நடத்த அரசு ஏற்கனவே முடிவெடுத்துவிட்டது என்பதை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதி வாரிக் கணக்கெடுப்பு: தற்போது குடும்பங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. வீடுகளுக்குச் சாதி கிடையாது. சமாஜ்வாதி கட்சியிடம் கேட்டால் வீடுகளுக்கும் சாதி நிர்ணயம் செய்வார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி குறித்த விவரங்களைச் சேகரிக்க உரிய வழிவகை செய்யப்படும். இதில் தனிப்பட்ட முறையில் எனக்கும் விருப்பம் உள்ளது. இவ்வாறு அமித் ஷா கூறினார்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு, வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரிக் கணக்கெடுப்பைச் சேர்க்க கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி முடிவெடுத்தது. சுதந்திரத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் சாதி விவரங்கள் தவிர்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.