

புதுடெல்லி: அரசியல் களத்தில் கடுமையாக மோதி வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் டெல்லியில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு விழாவில் ஒரே நேரத்தில் பங்கேற்றனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்) எம்பி சுப்ரியா சுலேயின் மகள் ரேவதி சுலே மற்றும் நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சாரங் லக்கானி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லி ஜன்பத் சாலையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.நாடாளுமன்றத்திலும் தேர்தல் பிரச்சாரங்களிலும் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபடும் பாஜக மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள், இத்திருமண விழாவில் மிகவும் இயல்பாக சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர். மேடைக்கு அருகே அமித் ஷாவும் ராகுல் காந்தியும் சில அடிகள் இடைவெளியில் வரிசையில் காத்திருந்தனர். சுப்ரியா சுலேயின் உபசரிப்பில், அமித் ஷா குடும்பத்தினர் வாழ்த்தி முடித்த உடனே, ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் மேடையேறி மணமக்களை வாழ்த்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி நேரில் வருகை தந்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் அவரது மனைவியைச் சந்தித்து நலம் விசாரித்த பின் மணமக்களை வாழ்த்தினார். மேலும், மத்திய அமைச் சர்கள் ஹர்தீப் சிங் பூரி, சிராக் பாஸ்வான், கஜேந்திர சிங் ஷெகாவத், ஸ்மிருதி இரானி மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்களும் இவ்விழாவில் பங்கேற்று மணமக்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.