

மும்பை: மும்பைக்கு சுற்றுலா வந்த அமெரிக்கப் பயணி ஒருவர், எதிர்பாராதவிதமாக கால் இடறி விழுந்து கணுக்காலில் காயமடைந்து வலியால் துடித்தார். தன்னிடம் செலவுக்குப் பணமில்லை என அவர் கூறியதைக் கேட்ட அப்பகுதி மக்கள், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவருக்கு மருத்துவமனையில் எக்ஸ்-ரே எடுக்கப்பட்டு, காயத்துக்குக் கட்டுப் போடப்பட்டதோடு மட்டுமன்றி, இலவசமாகவே சிகிச்சை அளிக்கப்பட்டது. தன்னிடம் கட்டணம் ஏதும் வாங்காமல் சிகிச்சை அளித்த இந்திய அரசு மருத்துவமனையின் சேவையைக் கண்டு அவர் வியப்படைந்தார்.
அமெரிக்காவில் இதே சிகிச்சைக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவாகும் என்று அவர் கூறினார். அமெரிக்காவின் மருத்துவக்கட்டமைப்போடு ஒப்பிடுகையில் இந்தியாவின் சேவை நம்ப முடியாத அளவுக்குச் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டினார். இறுதியில், தமக்கு உதவிய மும்பை மக்களுக்கும், அரசு மருத்துவமனைக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.