

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பிய பக்தர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 39 பேர் காயமடைந்தனர்.
கந்தர்பால் மாவட்டம் கங்கன் பகுதியில் உள்ள ஹரிகான்வான் என்ற இடத்தில், நேற்று காலை அமர்நாத் யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 39 பக்தர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமர்நாத் குகைக் கோயிலில் பாபா பர்ஃபானியை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிய பக்தர்கள் இந்த விபத்தில் சிக்கினர். விபத்து நடந்த உடனே அப்பகுதி மக்களும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில், “கந்தர்பால் சாலை விபத்தில் காயமடைந்த அமர்நாத் யாத்ரீகர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், சிறந்த சிகிச்சையையும் தாமதமின்றி வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்த பக்தர்கள் விரைவில் குணமடைய சிவபெருமானைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.