

லக்னோ: குழந்தை பிறப்புக்கான ஐவிஎப் சிகிச்சையில் பலன் கிடைக்காதது மோசடி அல்ல என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மருத்துவருக்கு எதிரான மோசடி வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் புலந்ஷெஹரை சேர்ந்த ஜைவீர் சிங் தம்பதிக்கு திருமணமாகியும் குழந்தை பிறக்கவில்லை. இதையடுத்து, 'டியோட்டியா மருத்துவமனை மற்றும் கருத்தரிப்பு மையம்' சென்றுள்ளார்.
அப்போது ஐவிஎப் சிகிச்சை மூலம் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என அந்த மையத்தின் மருத்துவர் உறுதி அளித்துள்ளார். இதற்கு கட்டணமாக ரூ.3.5 லட்சம் தவணை முறையில் செலுத்தி உள்ளார் ஜைவீர்சிங். எனினும், ரூ.1.6 லட்சத்துக்கு மட்டுமே ரசீது வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐவிஎப் சிகிச்சை அளித்தும் ஜைவீர் சிங்கின் மனைவி கர்ப்பம் தரிக்கவில்லை. இதனால், தான் செலுத்திய தொகையைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு மருத்துவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஜைவீர் சிங், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, ஐபிசி 420 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், அம் மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை எதிர்த்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அனுகியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சவான் பிரகாஷ் தலைமையிலான அமர்வு தனது தீர்ப்பில், மருத்துவ அறிவியல் என்பது துல்லியமான கணிப்புகளைக் கொண்ட அறிவியல் அல்ல எனக் கூறியுள்ளது.
எந்தவொரு மருத்துவரும் சிகிச்சையில் 100% வெற்றியை உறுதிப்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் அடிப்படையில், புலந்ஷெஹரைச் சேர்ந்த மருத்துவருக்கு எதிராக தொடரப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகளையும், அவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸையும் நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும், சிகிச்சை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதற்காக மட்டும், அந்த மருத்துவருக்கு ஏமாற்றும் நோக்கம் இருந்தது என்று கருத முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
ஐவிஎப் சிகிச்சை என்பது கர்ப்பம் தரிப்பதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் அல்ல. ஏனெனில், அதன் வெற்றி அல்லது தோல்வி பல உடலியல் மற்றும் மருத்துவக் காரணிகளைப் பொறுத்தே அமைகிறது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
சிகிச்சைகள் தோல்வியடையும் ஒவ்வொரு வழக்கிலும் மருத்துவர்கள் மீது பிரிவு 420-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டால், அது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கி, மருத்துவ நிபுணர்களைத் தேவையற்ற குற்றவியல் வழக்குகளுக்கு உள்ளாக்கும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்தது.
இதுபோல, மருத்துவரின் சேவைக்காக வழங்கப்பட்ட கட்டணத்தை திருப்பித்தரவும் உத்தரவிட முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதற்காக, 'ஜேக்கப் மேத்யூ எதிர் பஞ்சாப் மாநிலம்' என்ற வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி, அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.