

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
புதுடெல்லி: மக்களவையை போன்று அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தொகுதிகளும் 50 சதவீதம் அதிகரிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இதில் மகளிர் இடஒதுக்கீடு அமலாக்கம், மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியிருப்பதாவது:
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க மத்தியில் ஆளும் பாஜக அரசு உறுதியாக உள்ளது. இதன்படி அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது.
இதுதொடர்பான புதிய மசோதாக்கள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். இதை அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகக்கூடாது. அனைத்து கட்சிகளும் மசோதாக்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறேன். குறிப்பாக நாட்டின் நலனை கருத்தில் கொண்டு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க கோருகிறேன்.
ஒரே சீராக அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீத தொகுதிகள் அதிகரிக்கப்படுவதால் தென்மாநிலங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஒரு மாநிலத்தில் 20 மக்களவைத் தொகுதிகள் இருந்தால் அந்த மாநிலத்துக்கு கூடுதலாக 10 தொகுதிகள் கிடைக்கும்.
அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026 ஆகியவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். இதன்மூலம் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்படும். இதேபோல அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையும் 50 சதவீதம் அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 351 ஆக உயரும்
தமிழகத்தில் தற்போது 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஐம்பது சதவீத உயர்வு அடிப்படையில் தமிழகத்துக்கு கூடுதலாக 117 இடங்கள் கிடைக்கும். இதன்மூலம் தமிழக பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 351 ஆக அதிகரிக்க உள்ளது.
ஒரு மாநிலத்தில் அதிகபட்சம் 500 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மேல் இருக்கக்கூடாது என்று அரசியலமைப்பு சட்டம் 170-வது பிரிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது உத்தர பிரதேசத்தில் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஐம்பது சதவீத உயர்வு அடிப்படையில் அந்த மாநில பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 605 ஆக அதிகரிக்க உள்ளது. அந்த மாநிலத்தை இரண்டாக பிரிக்க மத்திய அரசு விரும்பவில்லை. இதை கருத்தில் கொண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளின் அதிகபட்ச வரம்பு 650 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.