ரஷ்ய அதிபர் புதினின் இந்திய பயணத்துக்காக விமானத்தில் வந்த சொகுசு கார்!
புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக நாளை (டிச.4) இந்தியா வருகிறார். அவர் வருகையை ஒட்டி ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில், அவருக்காக பிரத்யேகமாக அவர் பயன்படுத்தும் ஆரஸ் செனட் ரக சொகுசு கார் விமானத்தில் வரவழைக்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.
இந்தக் கார் புதினின் அரணாக விளங்குகிறது. இது ரஷ்ய ஆட்டோமொபைல் நிறுவனமான ஆரஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தால் 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இந்தக் காரை ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் அதிபரின் பாதுகாப்பு கருதி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் ‘நகரும் பாதுகாப்பு அரண்’ ( Fortress on wheels) என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு உருவாக்கினர்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த வாகனங்களை ரஷ்ய அதிபர் தொடங்கி முக்கியத் தலைவர்கள், அதிகாரிகள் வரை பயன்படுத்த வேண்டும் என்று அந்நாடு ‘கார்டெஸ்’ ( Kortezh ) என்ற திட்டத்தை முன்னெடுத்தது. அதன்படி, உருவாக்கப்பட்ட ஆரஸ் செனட் கார் புதின் வெளிநாட்டுப் பயணங்களுக்குச் சென்றால் முன்கூட்டியே அங்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
சமீபத்தில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின் போதும் புதினுக்காக இந்த கார் எடுத்தச் செல்லப்பட்டது. அந்தக் காரில் தான் பிரதமர் மோடி, புதினுடன் பயணித்தார் என்பது நினைவுகூரத்தக்கது. மேலும், இந்த ரக காரை ரஷ்யா அதன் நீண்ட கால நட்பு நாடான வட கொரியாவின் அதிபருக்கும் தயாரித்து வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை சுவாரஸ்யங்கள் நிறைந்த காரில் தான் புதின் டெல்லியில் வலம்வர இருக்கிறார். பாரத் மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். மேலும், குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்காக விருந்து உபசரிப்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் புதினுக்கான பாதுகாப்பு வளையத்தில், வெளி வட்டாரப் பாதுகாப்பில் டெல்லி போலீஸ் ஈடுபடுகின்றனர். ரஷ்ய அதிபரின் உள்வட்டார பாதுகாப்பை அவரது பாதுகாப்பு குழுவினரே கவனிக்கின்றனர். ரஷ்ய அதிபர் பிரதமர் மோடியை சந்திக்கும் போது, இந்தியாவின் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழுவினர் பாதுகாப்பு வழங்குகின்றனர்.
அதுமட்டுமல்லாது புதின் தங்கவிருக்கும் ஓட்டல் முழுவதுமாக சானிட்டைஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் சிறப்பு சோதனையையும் மேற்கொண்டு வருகின்றனர். அதுதவிர ரஷ்ய அதிபர் செல்லவுள்ள இடங்களிலும் அவர்கள் முழுமையாக சோதனை நடத்தி பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.
