ஜார்க்கண்ட் ஏர் ஆம்புலன்ஸ் விபத்து: நோயாளி உட்பட 7 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு

ஜார்க்கண்ட் ஏர் ஆம்புலன்ஸ் விபத்து: நோயாளி உட்பட 7 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு
Updated on
1 min read

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒருவர் பலியானதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது மீட்புப் பணிகளின் முடிவில் விமானத்தில் இருந்த எவரும் உயிர் பிழைக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (பிப். 23) மாலை ராஞ்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. தேடுதல் பணிகளுக்குப் பிறகு, சத்ரா மாவட்டத்தின் சிமரியா பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த நோயாளி, மருத்துவர்கள், உதவியாளர்கள் மற்றும் விமானிகள் என அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த நோயாளி சஞ்சய் குமார் (41) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ரெட்பேர்ட் ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்படும் பீச்கிராஃப்ட் சி90 விமானம், ராஞ்சியில் இருந்து மாலை 7:11 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10 மணியளவில் டெல்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.

விபத்து நடந்த இடம் மிகவும் அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால், மீட்புக் குழுவினர் அங்கு சென்றடைவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இரவு நேரத்தில் மீட்புப் பணிகள் தொய்வடைந்த நிலையில், இன்று அனைத்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தீப்பிடித்து விழுந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அவசர சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நோயாளியும், அவருக்கு உதவச் சென்ற மருத்துவக் குழுவினரும் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்க்கண்ட் ஏர் ஆம்புலன்ஸ் விபத்து: நோயாளி உட்பட 7 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு
அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய உத்தரவிட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in