

லக்னோ: அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் பல கோடி ரூபாய் காணாமல் போனதாக தகவல் கிடைத்துள்ளது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். இந்த விவகாரத்தை நீதிமன்றம் தனது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றும், தற்போது தணிக்கை செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதள பதிவில் மக்களவை உறுப்பினர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளதாவது:
“இந்தச் செய்தி நிச்சயம் உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு உணர்வுப்பூர்வமானதாகும். ராமர் கோயிலில் நன்கொடை காணிக்கையாக பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் காணாமல் போனதாக தகவல் கிடைத்துள்ளது.
இது கோயில் அறக்கட்டளைக்கு மிகவும் வெட்கக்கேடான நிலை. யாரும் எந்த விளக்கமும் அளிக்க முன்வர போவதில்லை. உலக அளவில் சனாதனத்தின் மீது நம்பிக்கை கொண்ட சமூகத்துடன் இது நேரடியாகத் தொடர்புடையது.
அதனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், அரசின் மவுனம் சந்தேகத்திற்குரியதாக உள்ளது” என்றார்.
அறக்கட்டளை நிர்வாகி மறுப்பு: குறிப்பிட்ட கால இடைவெளியில் அறக்கட்டளையில் உள் தணிக்கை பணி மேற்கொள்ளப்படும். இந்தத் தணிக்கை பணியை அறக்கட்டளை மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த தணிக்கை நடைமுறை பல நாட்களுக்குத் தொடரும். தற்போது தணிக்கை பணி நடைபெற்று வருகிறது. இதுவரை குறிப்பிடத்தக்க வகையில் எந்த முறைகேடும் கண்டறியப்படவில்லை என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில்: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை சார்பில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி 2020 ஆகஸ்டில் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
இதையடுத்து பொதுமக்களின் வழிபாட்டுக்கு கோயில் திறக்கப்பட்டது. எனினும், கட்டுமானப் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், கோயிலின் முழு கட்டுமானப் பணியும் கடந்த ஆண்டு அக்டோபரில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் பல கோடி ரூபாய் காணாமல் போனதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.