

லக்னோ: உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் லக்னோவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
நாடு முழுவதும் உ.பி. உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இது உடனடியாக நிறுத்தப்படவேண்டும். கடந்த 2022 உ.பி. சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சியால் 162 பேரவைத் தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது.
அதே நேரத்தில் 2022 தேர்தலில் 111 இடங்களில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. 2024 மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சி 183 இடங்களில் அதிகப்படியான வாக்குகளைப் பெற முடிந்தது.
2022-ம் ஆண்டு தேர்தலில் 2 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, மக்களவைத் தேர்தலில் 40 பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற முடிந்தது. இதன்மூலம் இந்த எஸ்ஐஆர் பணிகளைக் கொண்டு சதித்திட்டத்தை பாஜக செயலாற்ற முனைகிறது.
கடந்த தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் வெற்றி பெற்ற அல்லது முன்னிலையில் இருந்த தொகுதிகளில் இருந்து தலா 50 ஆயிரம் வாக்குகளை நீக்க பாஜகவும், தேர்தல் ஆணையமும் திட்டமிடுகின்றன. எனவே, நமது கட்சி நிர்வாகிகள் விழிப்புடன் பணியாற்றி நமது வாக்காளர்கள் பெயர்களை விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்தவித முறைகேடுக்கும் நாம் இடம் கொடுக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.