‘‘விமான விபத்து குறித்து விசாரணை’’ - அஜித் பவாரின் மறைவை அடுத்து ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு

‘‘விமான விபத்து குறித்து விசாரணை’’ - அஜித் பவாரின் மறைவை அடுத்து ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு
Updated on
1 min read

மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட ஐவர் உயிரிழப்புக்குக் காரணமான விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

அஜித் பவாரின் மறைவு மகாராஷ்டிர அரசியலில் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் அஜித் பவாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அஜித் பவாரின் மறைவு தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர துணை முதல்வரும் சிவ சேனாவின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, ‘‘அஜித் பவார் எனக்கு மூத்த சகோதரர் போன்றவர். அவரது மறைவு மகாராஷ்டிராவுக்கு ஒரு பேரிழப்பு. மகாராஷ்டிராவின் முன்னேற்றத்துக்காக நானும் அவரும் ஒரு குழுவாகப் பணியாற்றினோம். இப்போது அந்த குழுவின் ஒரு பகுதி இல்லாமல் போய்விட்டது. எனது மூத்த சகோதரரும் என்னைவிட்டு பிரிந்துவிட்டார். இந்த நாள் மகாராஷ்டிராவுக்கு ஒரு கருப்பு நாள். இந்த சம்பவம் அனைவருக்கும் மிகுந்த வேதனையை அளிக்கிறது.

அவர், தெளிவாகவும், சரளமாகவும் பேசக்கூடியவர். திறமையும் கடின உழைப்பும் கொண்டவர். நேர்மை மற்றம் அர்ப்பணிப்புமிக்க தலைவர். பார்க்கலாம்... யோசிக்கலாம்... போன்ற வார்த்தைகள் அவரது அகராதியில் கிடையாது.

அவர் எதற்காகவும் காத்திருக்க மாட்டார். எதைச் செய்ய விரும்பினாலும் அதை உடனடியாகச் செய்வார். தவறான திட்டம் என கருதினால், அதற்கு ‘நோ’ சொல்ல அவர் என்றும் தயங்கியது இல்லை. அதேநேரத்தில், மகளிருக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்தை நாங்கள் ஒரு குழுவாக தொடங்கினோம். அதில், அவர் முக்கிய பங்கு வகித்தார்.

நேரத்துக்கு மதிப்பு கொடுக்கும் ஒரு மனிதர் அவர். மக்களைச் சந்திக்க காலை 6 மணிக்கே நேரம் ஒதுக்கிய சம்பவங்களும் உண்டு. விடாமுயற்சியுள்ள, துணிச்சலான, ஒழுக்கமான தலைவர் அவர். இந்த விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.

இதுபோன்ற ஒரு துயர சம்பவம் மீண்டும் நிகழாத அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த துயரமான தருணத்தை எதிர்கொள்ள அவரது குடும்பத்தினருக்கு தைரியம் கிடைக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்தார்.

‘‘விமான விபத்து குறித்து விசாரணை’’ - அஜித் பவாரின் மறைவை அடுத்து ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு
விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மரணம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in