

புதுடெல்லி: இந்தியாவில் நடப்பு 2025-26-ம் கல்வி ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 58 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது. மாணவர் சேர்க்கைக் குறைவு, உள்கட்டமைப்பு வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏஐசிடிஇ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: நாடு முழுவதும் மொத்தம் 58 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளை முறையாக மூடுவதற்கு நடப்பு கல்வி ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முறையான மூடல் என்பது, அனுமதி வழங்கப்பட்ட அந்த குறிப்பிட்ட கல்வி ஆண்டில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை அந்தக் கல்வி நிறுவனங்கள் நடத்தக் கூடாது என்பதாகும். அதே நேரத்தில், அங்கு ஏற்கனவே படித்து வரும் பிற ஆண்டு மாணவர்கள் தங்களது படிப்பைத் தொடரவும், பட்டங்களைப் பெறவும் எவ்வித தடையும் இருக்காது.
மூடப்பட்ட 58 கல்வி நிறுவனங்களில், அதிகபட்சமாக உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 12 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்தில் 8 கல்லூரிகளும், தெலங்கானா மற்றும் பஞ்சாபில் தலா 4 கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.
ஆந்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 3 கல்லூரிகளும்; குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா 2 கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. ஹரியானா, ஒடிசா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு கல்லூரி மூடப்பட்டுள்ளது.
இந்த 58 நிறுவனங்களில், 3 கல்லூரிகள் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகும். மீதமுள்ளவை அனைத்தும் தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகும். மேலும், இதே காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 950-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.