

புதுடெல்லி: தற்சார்பு திட்டத்தில் ரூ.53,866 கோடியில் 8 புதிய தலைமுறை போர்க் கப்பல்களை வாங்கும் ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
இந்திய ராணுவ தளவாட உற்பத்தியில் தற்சார்பு (ஆத்மநிர்பார் பாரத்) திட்டத்தை மேலும் வலுப்படுத்த, இந்திய கடற்படைக்காக 8 புதிய தலைமுறை போர்க்கப்பல்களைக் கொள்முதல் செய்வதற்காக ரூ.53,866 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
இதன்படி, பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனங்களான ஜிஆர்எஸ்இ 5 போர்க்கப்பல்களையும், கோவா ஷிப்யார்ட் 3 போர்க்கப்பல்களையும் கட்டவுள்ளன. இந்திய கடற்படையால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, போட்டி ஏல நடைமுறை மூலம் பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உருவாக்கப்படும் முதல் போர்க்கப்பல் திட்டம் இது. இந்த வரலாற்று சிறப்புச் மிக்க ஒப்பந்தம் பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.
தற்போது தயாரிக்கப்பட உள்ள நவீன போர்க்கப்பலான கொர்வெட், ஃபிரிகேட் வகை போர்க்கப்பல்களை விட அளவில் சற்று சிறியது. அதேநேரம் அதிவேகமாக இயங்கக்கூடிய, சக்திவாய்ந்த ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள் பொருத்தப்பட்ட போர்க்கப்பல் ஆகும். நவீன ஏவுகணைகள், ரேடார் மற்றும் சென்சார் கருவிகள் இதில் இடம்பெறும். வான்வழி, கடல் மேல்மட்டம் மற்றும் நீருக்கடியில் உள்ள எதிரிகளின் இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
கடலோரப் பாதுகாப்பு, நீர்மூழ்கி எதிர்ப்புப் போர், கடல்சார் கண்காணிப்பு மற்றும் வணிகக் கடல் பாதைகளைப் பாதுகாக்கும் பணிகளில் இவை ஈடுபடுத்தப்படும். தற்போது இந்திய கடற்படையில் 18 முதல் 24 கொர்வெட் வகை போர்க்கப்பல்கள் சேவையில் உள்ள நிலையில், இந்த 8 புதிய போர்க்கப்பல்களின் சேர்க்கை இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புத் திறனைப் பலமடங்கு அதிகரிக்கும்.