மாநிலங்களவை உறுப்பினரானதும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் நிதிஷ் குமார்: ஜேடியு மூத்த தலைவர்

மாநிலங்களவை உறுப்பினரானதும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் நிதிஷ் குமார்: ஜேடியு மூத்த தலைவர்
Updated on
1 min read

புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினரான பிறகு முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்வார் என தெரிவித்துள்ள ஜேடியு மூத்த தலைவர் விஜய் சவுத்ரி, இன்னும் 2-3 நாட்கள் பொறுத்திருங்கள் என செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

பிஹார் முதல்வரான நிதிஷ் குமார், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதற்காக பாட்னாவில் இருந்து இன்று (ஏப். 9) டெல்லி வந்தார். அவருடன் பிஹார் அமைச்சரும் ஜேடியு மூத்த தலைவருமான விஜய் சவுத்ரியும் உடன் வந்தார்.

அப்போது நிதிஷ் குமார் முன்னிலையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த விஜய் சவுத்ரி, “மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற பிறகு நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார். இன்னும் 2-3 நாட்கள் பொறுத்திருங்கள்.

பிஹாரில் கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் ஆற்றிய பணிகளை நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம் என்று என்டிஏ கூட்டணியும், பாஜக தலைவர்களும், கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் தலைவர்களும் ஒருமித்த குரலில் பேசுகிறார்கள். பிற மாநிலங்களும் பின்பற்றும் வகையிலான நிதிஷ் மாடல் நிர்வாகத்தின் மூலம் பிஹார் எட்டியுள்ள உயரங்களை அடிப்படையாகக் கொண்டே நாங்கள் தொடர்ந்து பயணிப்போம். நிதிஷ் குமாரின் மரபை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்” என தெரிவித்தார்.

நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஜய் சவுத்ரி, “நிஷாந்த் குமார் ஏற்கெனவே கட்சியில் இணைந்துவிட்டார். அவர்கள் கட்சியில் தீவிரமாக பணியாற்றுவார்” என்றார்.

இதனிடையே, பிஹாரின் அடுத்த முதல்வர் சாம்ராட் சவுத்ரிதான் என்பதை அறிவிக்கும் சுவரொட்டிகள் பாட்னாவில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்துக்கு வெளியே இன்று ஒட்டப்பட்டன. பாஜகவினர் சார்பிலும் தலித் சமூக அமைப்பான வால்மீகி சமாஜ் சார்பிலும் இத்தகைய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. பாஜகவினர் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அக்கட்சியின் அலுவலகப் பணியாளர்கள் அகற்றிய நிலையில், வால்மீகி சமாஜ் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்படாமல் இருந்தன.

சுவரொட்டிகள் குறித்து விளக்கம் அளித்த பாஜக மாநில ஊடகப் பொறுப்பாளர் டேனிஷ் இக்பால், “இந்த சுவரொட்டிகளை ஒட்டியது யார் என்று எங்களுக்குத் தெரியாது. இந்த தருணத்தில் எங்களால் ஒன்றை மட்டுமே கூற முடியும். அதாவது கட்சியின் மரபுப் படி, அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் முடிவு கூட்டாகவே எடுக்கப்படும்” என கூறினார்.

மாநிலங்களவை உறுப்பினரானதும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் நிதிஷ் குமார்: ஜேடியு மூத்த தலைவர்
பாரமதி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து காங்கிரஸ் விலகல் - சுனேத்ரா பவாருக்கு ஆதரவு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in