

புதுடெல்லி: இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பல்வேறு உலக நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன என்று பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இரு நாடுகளின் கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் தலைமைச் செயல் அதிகாரி ஜெய்தீர்த் ராகவேந்திர ஜோஷி கூறியதாவது: கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் தரைமட்டமாக்கப்பட்டன. பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்கள் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டன. எதிரிகளின் ரேடார்களின் கண்காணிப்பை தாண்டி இந்த ஏவுகணைகள் மிகத் துல்லியமாக இலக்குகளைத் தாக்கின. இதுகுறித்து உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு சர்வதேச அளவில் பிரம்மோஸ் ஏவுகணை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த ஏவுகணையை வாங்க பல்வேறு உலக நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தியாவிடம் இருந்து முதல் நாடாக பிலிப்பைன்ஸ், பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கி உள்ளது. அடுத்ததாக வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் விரைவில் இந்த ஏவுகணைகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையைப் பெற ரஷ்யாவும் விருப்பம் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அடுத்த தலைமுறை பிரம்மோஸை தயாரிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.