

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வராக இருந்த சித்தராமையா கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜூன் 3-ம் தேதி டி.கே.சிவகுமார் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் துணை முதல்வராக பரமேஷ்வரும், அமைச்சர்களாக 12 பேரும் பதவி ஏற்றனர்.
அமைச்சரவையில் காலியாக இருந்த 20 இடங்களை கைப்பற்ற 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போட்டிப் போட்டனர். முதல்வர் டி.கே.சிவகுமார், மாநில தலைவர் பி.கே.ஹரிபிரசாத், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் இருமுறை டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அமைப்பு செயலாளர் கே.சி. வேணுகோபால், மேலிடப் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரை சந்தித்து 3 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட இழுபறிக்கு பின்னர், 60 நாட்களுக்கு பிறகு நேற்று 20 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலை காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டது.
இதையடுத்து, பெங்களூருவில் உள்ள லோக் பவனில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நேற்று மாலை 5 மணிக்கு சிவராஜ் தங்கடகி, ஜமீர் அஹமது கான், மது பங்காரப்பா, சந்தோஷ் லாட், செலுவராயசாமி, ரிஸ்வான் அர்ஷத் உள்ளிட்ட 19 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அமைச்சரவையில் இடம் கிடைக்காத தன்வீர் சேட், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த விஜயபுரா தொகுதி எம்எல்ஏ யஷ்வந்த்ராய கவுடா, பேலூர் தொகுதி எம்எல்ஏ கோபாலகிருஷ்ணா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதுகுறித்து, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், “அமைச்சரவையில் காலியாக இருந்த 20 இடங்களுக்கு 60 பேர் ஆசைப் பட்டனர். எல்லோரையும் அமைச்சரவையில் சேர்க்க முடியாது. வரும் காலங்களில் மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும். 2013-ல் எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை'' என்றார்.