

புதுடெல்லி: பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் ரூ.5 லட்சம் கோடிக்கு முதலீடு செய்வதற்கான திட்டங்களை அதானி குழுமம் தயார் செய்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதானி குழுமம் தனது தொழில்களை வேகமாகவும் பரவலாகவும் விரிவாக்கம் செய்து வருகிறது. பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்காக தனியார் முதலீடுகளை மாநில அரசுகள் ஈர்த்து வரும் நிலையில், சுமார் ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அதானி குழுமம் செயல்படுத்தியும், அதற்கான பணிகளை மேற்கொண்டும் வருகிறது.
ஒரு காலத்தில் பாஜகவுக்கு நெருக்கமான அமைப்பாகப் பார்க்கப்பட்ட போதிலும், தற்போது சாலைகள், துறைமுகங்கள், மின்சாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சிமெண்ட் மற்றும் தரவு மையங்கள் என பல துறைகளில் அரசியல் எல்லைகளைக் கடந்து அதானி குழுமத்தின் முதலீடுகள் விரிவடைந்துள்ளன.
கர்நாடகா, தெலங்கானா, கேரளா, தமிழ்நாடு, பிஹார் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் இக்குழுமத்தின் முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்கள் வாரியாக முதலீட்டு விவரங்கள்: கர்நாடகா: பெங்களூருவின் ஹெப்பால் மற்றும் சென்ட்ரல் சில்க் போர்டு இடையே திட்டமிடப்பட்டுள்ள 16.75 கி.மீ நீளமுள்ள வடக்கு-தெற்கு சுரங்கப் பாதை திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளியில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் மிகக் குறைந்த தொகையைக் குறிப்பிடப்பட்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ரூ.22,267 கோடி மதிப்பிலான இத்திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. முன்னதாக, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரை கவுதம் அதானி நேரில் சந்தித்துப் பேசினார். ஏற்கெனவே உடுப்பி மின்நிலையம், மங்களூரு விமான நிலையம் ஆகியவை அதானியின் கட்டுப்பாட்டில் உள்ளன.
கேரளா: விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத் திட்டத்தை அதானி போர்ட்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. முதல்கட்டத் திட்டங்களைத் தொடர்ந்து, 2026 ஜனவரியில் இதன் இரண்டாம் கட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக கூடுதலாக ரூ.16,000 கோடியை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இத்துறைமுகத்தில் அதானியின் மொத்த முதலீடு ரூ.30,000 கோடியை எட்டும். மேலும், திருவனந்தபுரம் விமான நிலையம் மற்றும் கொச்சி களமசேரியில் ரூ.600 கோடிக்கும் அதிகமான செலவில் ‘லாஜிஸ்டிக்ஸ் பார்க்’ அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
தெலங்கானா: காங்கிரஸ் அரசு 2024 ஜனவரியில் தரவு மையங்கள், ஆற்றல் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் துறை உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் ரூ.12,400 கோடி முதலீட்டிற்கான 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அதானி குழுமத்துடன் மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு: தமிழகத்தில் 2024-ல் ரூ.42,700 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அதானி குழுமம் அறிவித்தது. இதில் நீரேற்று மின் திட்டங்களுக்கு ரூ.24,500 கோடியும், தரவு மையத்திற்கு ரூ.13,200 கோடியும், சிமெண்ட் ஆலைகளுக்கு ரூ.3,500 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை வெளிவட்டச் சாலையின் பராமரிப்பு மற்றும் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உரிமையையும் ரூ.2,511 கோடிக்கு அதானி என்டர்பிரைசஸ் பெற்றுள்ளது.