

போபால்: உத்தர பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த நடிகை ட்விஷா சர்மா தற்கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. கடந்த சில நாட்களாக ட்விஷாவின் கணவர் சமர்த் சிங், மாமியார் கிரிபாலா சிங்கிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதன்தொடர்ச்சியாக இருவரையும் நேற்று போபாலில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ட்விஷாவின் மரணத்தில் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது மீண்டும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டது. ட்விஷாவை போன்று 80 கிலோ எடை கொண்ட உருவ பொம்மை கொண்டுவரப்பட்டது. அது தூக்கில் தொங்க விடப்பட்டது. அப்போது கணவர் சமர்த் சிங்கும், மாமியார் கிரிபால் சிங்கிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் ட்விஷாவின் உடலை கீழே இறக்கியது ஏன்? சிசிடிவி கேமரா பதிவுகளை முழுமையாக அழித்தது ஏன்? ட்விஷா தூக்கில் தொங்க பயன்படுத்திய கயிறை மறைத்தது ஏன்? தவறு செய்யவில்லை என்றால் கணவர் சமர்த் சிங் தலைமறைவானது ஏன் என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.
இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறும்போது, ‘‘மாமியார் கிரிபாலா சிங் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார். கணவர் சமர்த் சிங் கிரிமினல் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கிரிபாலா சிங் தனது செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு முக்கிய தடயங்களை அழித்துள்ளார்’’ என்று தெரிவித்துள்ளன.